மதுரை: மதுரை ஆவினில் பால் விநியோகிப்பதில் பிரச்சினை இருப்பதாகவும், கணினிசார் தொழில்நுட்ப பிரச்சினைதான் இதற்குக் காரணம் என்றும் முகவர்கள் கூறும் நிலையில், அதுபோன்ற ஒரு பிரச்சினையே இல்லை என்று ஆவின் பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.
மதுரை அண்ணா நகரில் செயல்படும் ஆவின் நிர்வாகம் மூலம் மதுரை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான முகவர்களுக்கு காலை, மதியம், இரவு என, மூன்று நேரமும் பால் விநியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் முகவர்களுக்கு பால், தயிர், மோர் எவ்வளவு தேவையோ அதற்குரிய பணத்தை மண்டலங்கள் வாரியான அலுவலகங்களில் முதல் நாளே செலுத்துவது வழக்கம். அதன்படி, பணம் செலுத்த சென்ற முகவர்களிடம், ”மதுரை அண்ணா நகர் ஆவின் அலுவலகத்தில் கணினி மென்பொருளில் (சாப்ட்வேர்) பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே கடந்த 15-ம் தேதி எவ்வளவு பணம் செலுத்தினீர்களோ அந்த அளவு பணத்தையே செலுத்தவேண்டும். அன்றைய தினம் என்ன ஆர்டர் கொடுத்திருந்தீர்களோ அது மட்டுமே நாளை விநியோகிக்க முடியும்” என அதிகாரிகள் தரப்பில் கூறியதாக முகவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆவின் முகவர் ஒருவர், “ஆவின் நிர்வாகம் சாப்ட்வேர் பிரச்னையால் பால் குறைப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மார்ச் 15-ம் தேதியில் சிலருக்கு குறைந்த அளவில் பால் தேவையாக இருந்திருக்கும். தற்போது சிலர் அதிக அளவிலான ஆர்டர் பெற்று கூடுதலாக பணம் செலுத்த விரும்பலாம். அல்லது ஆர்டர் குறைந்துவிட்டதால் குறைவாக தொகையை செலுத்த விரும்பலாம்.
அதிகாரிகள் இவ்வாறு கூறுவது சிரமத்தை ஏற்படுத்தும். இது குறித்து எடுத்துக்கூறியும் அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. ஆவின் தலைமை அலுவலகம் என்ன கூறியதோ அதன்படி தான் செயல்படுவோம் என்கின்றனர். கடந்த 15-ம் தேதி ஒரு விழாவுக்காக அதிக எண்ணிக்கையில் ஆர்டர் பெற்றிருந்தேன். அன்றைய தினம் செலுத்திய தொகையைச் செலுத்த வேண்டும் என்றால் கூடுதல் பணத்துக்கு எங்கே போவது? அதோடு கூடுதல் பாலை எங்கே விற்பது? இது போன்ற நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன’’ என கூறினார்.
இது குறித்து ஆவின் பொதுமேலாளர் சாந்தியிடம் கேட்டபோது, ”மதுரை ஆவினில் சாப்ட்வேர் பிரச்னை எதுவுமில்லை. முகவர்களுக்கு தேவையான பால் எப்போதும் போல் விநியோகம் செய்யப்படுகிறது” என்றார். இதனால், எது உண்மை என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.