அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 24ஆம் தேதி வரை வெளியிட வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தனித்தனியாக அவசர வழக்குகளை தாக்கல் செய்தனர்.
வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் தரப்பினர் மாறி மாறி வாதங்களை முன்வைத்தனர். இறுதியில் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள போது, தேர்தல் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகள் தொடரலாம் எனவும், தேர்தல் முடிவுகளை மார்ச் 24ஆம் தேதி வரை வெளியிட வேண்டாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த பிரதான வழக்கை 22ஆம் தேதி விசாரித்து 24ம் தேதி தீர்ப்பு வழங்குவதாகவும் நீதிபதி அறிவித்துள்ளார். இதனால் ஓபிஎஸ் அணியினர் இதை தங்கள் வெற்றியாக கருதி உற்சாகத்தில் உள்ளனர்.
newstm.in