டெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பரில் தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி மேற்கொண்டார். வட மற்றும் தென்னிந்திய பகுதிகளை கடந்து சென்ற இந்த பாதயாத்திரையின்போது, கடந்த ஜனவரி 30-ந்தேதி ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் பேசும்போது, நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது அதிகரித்து காணப்படுகிறது. ஊடகங்கள் இதனை பற்றி பேசுவதே இல்லை என கூறினார். தொடர்ந்து அவர் கூறும்போது, பெண்கள் சிலர் தன்னை சந்தித்தபோது, அவர்கள் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி என்னிடம் கூறினர். அவர்களிடம், போலீசாரிடம் சென்று புகார் கொடுக்கும்படி கூறினேன்.
எனினும், திருமணம் நடைபெறாமல் போய் விடும் என்பதற்காக யோசிக்கிறோம் என அவர்கள் கூறினர் என்று ராகுல் காந்தி கூறினார். இந்நிலையில் டெல்லியில் உள்ள ராகுல் காந்தி வீட்டில் சட்டம் மற்றும் ஒழுங்குக்கான சிறப்பு காவல் ஆணையாளர் சாகர் பிரீத் ஹூடா தலைமையிலான டெல்லி போலீசார் வந்தனர். அப்போது சிறப்பு காவல் ஆணையாளர் சாகர் பிரீத் ஹூடா செய்தியாளர்களிடம் கூறும்போது,
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களின் விவரங்களை ராகுல் காந்தியிடம் கேட்க கடந்த 15-ந்தேதி அவரை சந்திக்க முயன்ரோம், ஆனால், அது முடியாமல் போனது, அதை தொடர்ந்து கடந்த 16-ந்தேதி அவருக்கு நோட்டீஸ் அனுப்பினோம். இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களின் விவரங்களை பற்றி விசாரிக்க நாங்கள் வந்திருக்கிறோம்.இதற்காக அவரிடம் பேச இருக்கிறோம். இதனால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வழியேற்படும் என கூறினார்.
இதையடுத்து டெல்லி போலீசார் இது தொடர்பாக ராகுல் காந்தியிடம் பேசினர். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி தனக்கு இது தொடர்பாக விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும் என கூறினார். அதை டெல்லி போலீசார் ஏற்று கொண்டு அவருக்கு கால அவகாசம் கொடுத்தனர். இதையடுத்து அவர் தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
முன்னதாக ராகுல் காந்தி வீட்டுக்கு டெல்லி போலீசார் வந்த தகவலை அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்தி வீட்டுக்கு வெளியே திரண்டனர். அவர்கள் போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். டெல்லி போலீசாரின் நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.