கோயில்களின் நகரம், சோழர் காலத்தின் தலைநகரமாக இருந்த கும்பகோணம். கடந்த 1868 ஆம் ஆண்டு கும்பகோணம் ஜில்லாவாக, தலைநகராக இருந்ததற்கு உண்டான சான்றுகள் உள்ளன.
மேலும், அறிய பல சிறப்புகளை கொண்ட கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் முன் எடுக்கப்பட்டு வருகிறது.
இதில், பாமகவை சேர்ந்த ஆடுதுறை பேரூராட்சி தலைவரும், கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ம.க. ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சியினர், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசும் போது, கும்பகோணத்தைத் தலைமையிடமாக்க கொண்டு தனி மாவட்டமாக அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால், திமுக பொறுப்பேற்று 21 மாதங்களை கடந்த நிலையில் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், நாளை தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதிபடி கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்ட அறிவிப்பை நாளை நடக்கவுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவித்த வேண்டும் என்று, தமிழக முதல்வருக்கு நினைவூட்டும் வகையில், ஒரு லட்சம் தபால் அனுப்பும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளதாக கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.
நாளை காலை 11 மணியளவில் பாபநாசம் தபால் நிலையத்தின் முன்பு, கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்பு குழு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக, ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் ஆடுதுறை பேரூராட்சி பாமக சேர்மனுமான மக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.