தந்தை தந்த இசை வரம்! – சீர்காழி சிவசிதம்பரம் நெகிழ்ச்சி
காந்த குரலா… கணீர் குரலா… என கேட்பவரை மயக்கும்; பட்டி தொட்டியெல்லாம் இவரது குரலுக்கும், தந்தை குரலுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தன் மருத்துவ தொழிலுக்கு ஓய்வு கொடுத்தாலும், தன் குரலுக்கு ஓய்வு கொடுக்கவில்லை டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம். இவரது தந்தை சீர்காழி கோவிந்தராஜனுக்கு அளித்த ஆதரவு போல் இவருக்கும் ரசிகர்கள் 'பிசிறு' இல்லாமல் ஆதரவு தருவது ஆச்சரியம். மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் தமிழிசை சங்க விழாவில் பாட வந்தவர், தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பாடினார்… ஸாரி… பேசினார்.
பாடகரா, மருத்துவரா… உங்களுக்கு எது விருப்பம்
இரண்டு கண்ணில் எது பிடிக்கும் என்று கேட்கிற மாதிரி இருக்கு. தந்தையின் ஆசை நான் மருத்துவராக வேண்டும் என்பது. ஆகிவிட்டேன். என் ஆசை அவர் மாதிரி பாட வேண்டும் என்பது. பாடி வருகிறேன்.
தந்தை சீர்காழி கோவிந்தராஜன் பற்றி…
இசைக்காக வாழ்ந்த இசை மேதை. என் தந்தையாக பெற்றது நான் செய்த புண்ணியம். அவர் எனக்கு தந்த இசை எனக்கு கிடைத்த வரம்.
நீங்கள் பாடகராக வர தந்தை சம்மதித்தாரா
நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் தந்தையுடன் கச்சேரி, பாடல் பதிவிற்கு செல்லும் போது இசை ஆர்வம் அதிகரித்தது. என் விருப்பத்திற்கு தாயாரும் துணையாக இருந்தார். இசை மேதையின் மகன் இசையறிவு இல்லாமல் இருக்கலாமா என தந்தையிடம் பரிந்துரை செய்து கர்நாடக இசை கற்க வைத்தார்.
உங்கள் குருநாதர் தந்தையா
என் குரு கிருஷ்ணமூர்த்தி. அவரும், என் தந்தையும் ஒன்றாக இசைக்கல்லுாரியில் படித்தவர்கள். இதனால் என் தந்தையின் எண்ணத்தை புரிந்து கொண்ட குருநாதரும், முதலில் பாடங்களை நன்றாக படித்திருக்கிறாயா என கேட்ட பிறகு தான் கர்நாடகா இசையை கற்று கொடுத்தார்.
ஒரே குடும்பத்தில் தந்தையும், மகனும் பத்மஸ்ரீ விருது பெற்றதை எப்படி பார்க்கிறீர்கள்
எங்கள் இருவருக்கும் பத்மஸ்ரீ விருதும், தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கியதை எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன். எனது அப்பா, 'நீ எனக்கு கிடைத்த நல்ல மகன்' என கூறியது மறக்க முடியாத பாராட்டு.
மறக்க முடியாத நிகழ்வு
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய 'எனது அருமை ராணுவ வீரர்கள்' என்ற பாடலை சென்னை தமிழிசை சங்க விழாவில் அவர் முன்னால் பாடியது மறக்க முடியாத நிகழ்வாக கருதுகிறேன்.
இன்றைய பாடகர்கள் வார்த்தை உச்சரிப்பில் கவனம் செலுத்துகிறார்களா
புதுமை என்ற பெயரில் மொழி உச்சரிப்பை அலட்சியம் செய்யாமல் பாட வேண்டும். இவ்வாறு கூறினார்.