கோவை: கோவை காரமடை பகுதியில் வாயில் காயமடைந்த நிலையில் பிடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. யானைக்கு நாக்கில் காயம் ஏற்பட்டு இருந்ததால் உணவு எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
கோவை மாவட்டம் காரமடை அருகே வாயில் காயமடைந்த நிலையில், சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த யானை உயிரிழந்தது. கோயம்புத்தூர், கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள ஆதிமாதையனூர், முத்துக்கல்லூர் கிராமங்களில் காட்டு யானை வாயில் காயத்துடன் சுற்றி திரிந்து வந்தது. மேலும் விளை நிலங்களுக்கு புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் யானையை பிடிக்க வேண்டும் அல்லது வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் இருந்து சின்னதம்பி கும்கி யானை வரவழைக்கப்பட்டு, காயத்துடன் சுற்றி திரிந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கும்கி யானை உதவியுடன் யானையை பிடித்து லாரியில் ஏற்றி டாப்சிலிப் வரகளியாறு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு தயார் நிலையில் இருந்த மரக்கூண்டில் யானையை வனத்துறையினர் அடைத்தனர்.
இதனை அடுத்து, மருத்துவ குழுவினர் யானையின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். யானையால் சாப்பிட முடியாத நிலையில், அதற்கு குளுக்கோஸ் கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.