நாகப்பட்டினம்: திருமருகல் அருகே பிரம்மநந்தீஸ்வரர் கோயில் திருப்பணிக்கு பள்ளம் தோண்டும் போது 11ம் நூற்றாண்டு அப்பர் கல் சிலை கண்டெடுக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே திருக்கண்ணபுரம் ஊராட்சி பிரம்மநந்தீஸ்வரர் தெருவில் திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான பிரம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது. பாழடைந்த நிலையில் உள்ள இந்த கோயிலில் நேற்று திருப்பணி நடந்தது. இதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோன்றினர்.
அப்போ ஒன்றரை அடி உயரம் உள்ள கற்களால் ஆன அப்பர் சிலை உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நாகப்பட்டினம் தாசில்தார் ராஜசேகரன், வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சிலையை கைப்பற்றி நாகப்பட்டினம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சிலை 11-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.