கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நீச்சல் வீராங்கனையான பூலட்சி, தமக்கு ஒரு வீட்டை தமிழக அரசு இலவசமாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இரண்டு குழந்தைகளுக்கு தாய்.. ஆனாலும் சாதனை செய்யும் பெண்!
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை அடுத்த பூதிமூட்லு கிராமத்தைச் சேர்ந்தவர் பூலட்சுமி (35). இவர், அங்கன்வாடி மையத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மகள் கார்த்திகா(17), மகன் பிரதீப்குமார்(16). இவர்கள் முறையே வேப்பனப்பள்ளி அரசுப் பள்ளியில் பிளஸ் 2, பிளஸ் 1 வகுப்பு பயின்று வருகின்றனர். பூலட்சுமி, சிறுவயதில் இருந்தே, நீச்சலடிப்பதில் ஆர்வம் உள்ளவர்.
சாதனை வீராங்கனை வாழ்வில் நிகழ்ந்த சோதனை!
இந்த நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தின்போது பூலட்சுமி தன்னுடைய இடது காலை இழந்தார். தற்போது அவருக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டு அதன்படி வேலைகள் செய்துவருகிறார். அதேநேரத்தில், தன்னுடைய நீச்சல் ஆசையையும் கைவிடாத அவர், அந்தக் கிராமத்தில் உள்ள ஆறு, குளங்களிலேயே நீச்சல் பயிற்சி மேற்கொண்டார். மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் குளம் இருந்தும், அங்கு பணம் கட்டி பயிற்சி பெற முடியாததால், யூடியூபில் வீடியோக்களைப் பார்த்து நீச்சல் கற்றுள்ளார். இதற்கிடையே, கிருஷ்ணகிரி பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் உதவியுடன் கடந்த 2022ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பளு தூக்குதல் போட்டியில், 45 வயது எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
சோதனைகளை கடந்து ஏழ்மையிலும் சாதனை!
தொடர்ந்து பயிற்சியாளர் இன்றி நீச்சலில் கடின பயிற்சி மேற்கொண்ட பூலட்சுமி, சென்னையில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில், ப்ரிஸ்டைல் மற்றும் பிரஸ்டோக் பிரிவுகளில் தங்கமும், ஸ்டோக் பிரிவில் வெள்ளியும் வென்று சாதனை படைத்தார். நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு அவரால் வெற்றிபெற்றபோதும், வறுமை நிலையிலிருந்து பூலட்சுமியால் வெற்றிபெற முடியவில்லை. அதற்குக் காரணம், வறுமை. குறிப்பாக, அவரும், அவரது குழந்தைகளும்ம் பாதுகாப்பில்லாத, சேதமடைந்த வீட்டில் வசிக்கின்றனர். வீடு ஒன்றை, தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்பது பூலட்சுமியின் வேண்டுகோளாக இருக்கிறது.
”சேதமடைந்த வீட்டில் வாழ்கிறேன்.. அரசுதான்”
இதுகுறித்து பூலட்சுமி, “நாங்கள் வசிக்கும் வீட்டில் உள்ள சிமெண்ட் மேற்கூரைகள், பல்வேறு இடங்களில் உடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் உறக்கமின்றி மழைநீர் வடியும் வரை விடியவிடிய அவதியுடன் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. நாங்கள் வசிக்கும் வீட்டை சுற்றியும் முட்புதர்களும் நிறைந்து சுவர்கள் இடிந்து பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மேலும், நீச்சல் போட்டியில் பங்கேற்க வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்லும்போது, குழந்தைகளை உடன் அழைத்துச் செல்ல போதிய பொருளாதாரம் வசதி இல்லை.
ரூ.1.50 லட்சம் கட்ட வேண்டும்’ என்கின்றனர்..
அதேநேரத்தில், குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டுச்செல்லவும் மனமில்லை. பில்லனகுப்பத்தில் உள்ள அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து தரக் கோரி விண்ணப்பம் அளித்தோம். அதற்கு ’ரூ.1.50 லட்சம் கட்ட வேண்டும்’ என்கின்றனர். அவ்வளவு பணம் எங்களிடம் இல்லாததால் அந்த வீட்டைப் பெற முடியவில்லை. ஆகையால், தமிழக அரசு எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கி அரசு திட்டங்களின்கீழ் வீடு ஒன்றையும் கட்டித் தர வேண்டும்” என அரசிடம் கண்ணீர்மல்க கோரிக்கை வைத்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM