திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சலுகை கிராமத்தில் மிகவும் பழமையான தர்ம முனீஸ்வரர் கோயில் உள்ளது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், தர்ம முனீஸ்வரரை குலதெய்வமாக வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள், பொங்கலிட்டு வழிபாடு செய்வது வழக்கம். கோயில் வளாகத்தில் மிகவும் பழமையான ஆலமரம் உள்ளது. இந்த மரத்து நிழலில் பொங்கல் வைத்து, கிராம மக்கள் தர்ம முனீஸ்வரரை வழிபடுவது வழக்கம்.
நேற்று முனீஸ்வரர் கோயிலுக்கு வந்து வழிபட்ட பக்தர்கள் சிலர், ஆலமரத்துக்கு கீழ் பொங்கல் வைத்துள்ளனர். இதில் பொங்கல் வைப்பதற்காக பயன்படுத்திய கல் அடுப்பில் தீ சரியாக அணைக்கப்படாமல் இருந்துள்ளது. அதில் இருந்து பரவிய தீ, ஆலமரத்தில் பற்றியது. காய்ந்த நிலையில் இருந்த மரத்தின் கிளைகளில் தீ மளமளவென பரவியது. அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து அணைப்பதற்குள் மரம் முழுவதுமாக எரிந்து கருகி விட்டது. கோயில் வளாகத்தில் ஆண்டாண்டு காலமாக இருந்த ஆலமரம், தீயில் எரிந்ததால் பக்தர்கள், அப்பகுதி மக்கள் வேதனையடைந்துள்ளனர்.