மதுரை கோட்டத்தில் 85 சதவீதம் மின் மயமாக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது என்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கு உண்டான அறிவிப்பை, மத்திய அரசு கடந்த வாரம் வெளியிட்டு இருந்தது. அதன்படி, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் தலைமையில், ரயில்வே அதிகாரிகள் இன்று புதுக்கோட்டை ரயில் நிலையத்தை ஆய்வுசெய்து, அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ், என்னென்ன பணிகள் செய்ய வேண்டும், ரயில் நிலையத்தை மேம்படுத்தப்பட வேண்டிய பணிகள், எந்தெந்த பணிகளுக்கு முன்னுரிமை அளித்து நடத்த வேண்டும் என ஆய்வு செய்தனர்.
அப்போது பொதுமக்கள், புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் கழிவறை மற்றும் குடிநீர் வசதிகள் இல்லை என்று அவர்களிடம் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ரயில்வே மேலாளர், ரயில் நிலையத்தில் உள்ள கழிவறை மற்றும் குடிநீர் தொட்டிகளை ஆய்வு மேற்கொண்டு, ‘ஏன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இது கொண்டு வரவில்லை’ என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஆனந்த், மத்திய அரசின் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ், மதுரை கோட்டத்திற்குட்பட்ட 15 ரயில் நிலையங்கள், பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்துவதற்கு உத்தரவிட்டதன் பேரில், தற்போது 15 ரயில் நிலையங்களிலும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்று புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு வசதிகள் மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை கோட்டத்தில் 85 சதவீதம் மின் மயமாக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 15 சதவீத பணிகள் விரைவில் முடிக்கப்படும். புதிய ரயில் இயக்கம் மற்றும் புதிய ரயில் பாதை தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். ஆசியாவிலேயே முதன்முதலாக பாம்பன் பாலம் நவீனமயமாக்கும் பணி நடந்து வருகிறது. பாதுகாப்பு சோதனை ஓட்டம் முடிவடைந்து, முறைப்படி அவர்கள் அனுமதி அளித்து சான்றிதழ் அளித்த பின்னர் முறைப்படி திறந்து வைக்கப்படும்.
மதுரை கோட்டத்தில் ஆளில்லாத லெவல் கிராசிங் கிடையாது. முறைகேடாக ஆள் இல்லாத ரயில்வே வெலல் கிராசிங் உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொண்டு, அவ்வாறு முறைகேடாக ரயில்வே லெவல் கிராசிங் இருந்தால், அது குறித்து கண்டுபிடித்து கடும் நடவடிக்கப்படும்” என்று ஆனந்த் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM