பெரியகுளம்: எடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ் அணி, அமமுக இணைய வேண்டும் என, இருதரப்பிலும் கோரிக்கை வலுத்துள்ளது. இதை வெளிப்படுத்தும் விதமாக பெரியகுளம் பகுதியில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். ஜெயலலிதா இறந்தபின், அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஓபிஎஸ் பிரிந்து மீண்டும் இணைந்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓபிஎஸ்க்கும் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. அதிமுக ஆட்சியின்போது நடந்த நாடாளுமன்ற தேர்தல், தொடர்ந்து நடந்த உள்ளாட்சி தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை தழுவியது. கடந்த சட்டமன்ற தேர்தலிலும் ஆட்சியை இழந்தது.
தேர்தல் தோல்விக்கு எடப்பாடியின் சர்வாதிகாரமே காரணமென ஓபிஎஸ்சும், கட்சிபணிகளில் முழுமையாக ஈடுபடவில்லை என ஓபிஎஸ் மீது எடப்பாடியும் மாறி, மாறி குற்றம் சாட்டினர்.
இதைத்தொடர்ந்து அதிமுக பொதுக்குழுவை கூட்டி இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வந்ததையடுத்து, ஓபிஎஸ்சை முழுமையாக ஓரங்கட்ட துவங்கினார் எடப்பாடி. ஓபிஎஸ் தரப்பு தனி அணியாகவே செயல்பட்டு வந்தது. மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதன் பிறகு எடப்பாடி தொடர்ச்சியாக எட்டு தோல்விகளை தந்து அதிமுகவை படுகுழியில் தள்ளிவிட்டார் என ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் தரப்பினர் மாறி, மாறி விமர்சித்து வருகின்றனர்.
எடப்பாடிக்கு எதிராக நெல்லை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து தற்போது இருக்கும் ஆதரவாளர்களை தக்க வைக்க, சமூகரீதியான வாக்கு வங்கியை காப்பாற்ற சசிகலா, டிடிவியுடன் இணைந்து செயல்பட ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். இதற்கு ஓபிஎஸ்சும் பச்சைக்கொடி காட்டினார். மேலும், சசிகலா, டிடிவியை சந்தித்து இணைந்து செயல்படுவேன் என பகிரங்கமாகவே அறிவித்தார். இதனால் ஓபிஎஸ் அணி, அமமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதன் எதிரொலியாக சமீபத்தில் தேனியில் நடந்த ஒரு போராட்டத்தில் அமமுக, ஓபிஎஸ் அணியினர் இணைந்து கலந்து கொண்டனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி, அக்கட்சி தலைமையகத்தில் விண்ணப்பித்தார். வேறு யாரும் விண்ணப்பிக்காததால் போட்டியின்றி எடப்பாடி பொதுச்செயலாளராக தேர்வாவது ஏறக்குறைய முடிவு செய்யப்பட்டு விட்டது. இந்த தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவசர வழக்காக இதனை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றும் எடப்பாடி கனவுக்கு தற்காலிகமாக முட்டுக்கட்டை போட்டுள்ளது. தேர்தல் முடிவை 24ம் தேதி வரை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
மேலும், வரும் 22ம் தேதி நடக்க உள்ள விசாரணையின்போது பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக விவாதிக்கப்படுமென தெரிவித்துள்ளது. இதனால் ஓபிஎஸ் அணி, அமமுக தொண்டர்கள் இறுதி தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகத்தான் வரும் என எதிர்பார்த்துள்ளனர். இதை வெளிப்படுத்தும்விதமாக சசிகலா, ஓபிஎஸ், டிடிவி.தினகரன் படங்களுடன் தொண்டர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி, போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை பகுதியில் ஓபிஎஸ் ஆதரவாளரும், தேனி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளருமான முத்து என்பவர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோர் படங்களுடன் பேனர் வைத்துள்ளார். அதில், ‘ஒற்றுமையே வலிமை, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, கழக தொண்டர்களே வாருங்கள் ஒன்றிணைவோம்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஓபிஎஸ் அணி, அமமுக தொண்டர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதேபோல் ஒற்றுைமையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போஸ்டர் அடிக்க இருதரப்பு நிர்வாகிகளும் திட்டமிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.