புதுச்சேரி மாநிலத்தில் மக்கள்தொகைக்கு இணையாக வாகனங்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதுவரை 11.20 லட்சம் வாகனங்கள் போக்குவரத்து துறையில் பதிவு செய்யப்பட்டு சாலையில் ஓடுகின்றன.
வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள சூழ்நிலையில் அதை ஈடுகொடுக்க முடியாமல் புதுச்சேரி சாலைகள் திணறி வருகின்றன. மற்றொரு பக்கம் சாலையில் அதிகரித்துள்ள வாகனங்களை சமாளிக்க முடியாமல் போக்குவரத்து போலீசாரும் ஆட்கள் பற்றாக்குறையால் தினமும் திணறி வருகின்றனர்.
போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களில் காலத்துகேற்ப பணியிடங்களை நிரப்பாததே இதற்கு முக்கிய காரணம். மத்திய உள்துறை அமைச்சகம் வகுத்துள்ள நெறிமுறைகளின்படியும் புதுச்சேரி போக்குவரத்து ஸ்டேஷனில் பணியிடங்கள் தற்போது இல்லை.
காவல் துறை ஆராய்ச்சி மேம்பாட்டு செயலகம் வழங்கியுள்ள நெறிகாட்டுதலின்படி புதுச்சேரி மாநிலத்தில் 1,057 போக்குவரத்து காவலர்கள் இருக்க வேண்டும். ஆனால் மொத்தமே 176 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 881 போக்குவரத்து காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இது கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், உதவி சப் இன்ஸ்பெக்டர், தலைமை காவலர், போலீஸ் கான்ஸ்டபிள் என அனைத்து நிலைகளிலும் இந்த காலியிடங்கள் உள்ளது. குறிப்பாக கான்ஸ்டபிள்கள் பணியிடங்கள்அதிக அளவில் காலியாக உள்ளன.
விதிமுறைகளின்படி புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களில் 927 கான்ஸ்டபிள்கள் இருக்க வேண்டும். ஆனால் வெறும் 121 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 806 கான்ஸ்டபிள்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அதாவது, போக்குவரத்து காவல் துறையில் மொத்தமுள்ள 1057பணியிடங்களில் 83.35 சதவீதம் காலியாகவே உள்ளது. வெறும் 16.65 சதவீத பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
இப்படி இருந்தால் எப்படி போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியும் என்று கேள்வி எழுந்துள்ளது.
தற்போதுள்ள, 176 போக்குவரத்து கான்ஸ்டபிகள் கூட பலரும் நகர பகுதியில் வி.ஐ.பி., வருகை, சிக்னல்கள், மறியல், போராட்டம் என பல்வேறு பிரச்னைகளுக்கு சமாளிக்க சென்று விடுகின்றனர்.
குறைவான காவலர்களை கொண்டு அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பது இயலாத காரியம். இதன் காரணமாகவே அனைத்து பகுகளிலும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளது.
காவல் துறையில் தற்போது 380 காவலர்பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்து உடற்தகுதி தேர்வுகளை நடத்தி வருகிறது.
இதில் 100 பணியிடங்களை போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனுக்குஒதுக்கலாம் என, அரசு திட்டமிட்டுள்ளது.
அப்படி 100 கான்ஸ்டபிள்களை ஒதுக்கினால் கூட புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாது. போக்குவரத்து காவலர் எண்ணிக்கை 16.65 சதவீதத்தில் இருந்து 26.1 சதவீதமாக மட்டுமே உயரும். கூடுதலாக 10 சதவீதம் அதிகரித்தாலும் இதை வைத்துக்கொண்டும் நகர பகுதியில் இன்றைய சூழலில் வாகனங்களையும், போக்குவரத்து நெரிசலையும்சமாளிக்க முடியாது.
எனவே போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் காலியாக உள்ளகாவலர் பணியிடங்களை முழுவதுமாக நிரப்ப புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்