ஈரோடு: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7வது பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் தலைமையில் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்தில், அரசு பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் அதன்பின் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுவதை தடை செய்யும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் செய்யவேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை தடுப்பதுடன், பழையபடி மானியங்களை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும். நீட் நுழைவுத் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்திட வேண்டும். தேவையற்ற இலவசங்களை வழங்குவதை தவிர்த்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.