கும்பகோணம்: மலேசியாவில் பாடம் எடுத்த ஆசிரியரை அவரது சொந்த ஊரான தஞ்சாவூர் அருகே மலேசியா நாட்டின் சரவாக் மாநில துணை முதல்வர் அவாங் தெங்கா அலி ஹஸன் நேரில் சந்தித்து பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், ராஜகிரி கீழ தெருவை சேர்ந்தவர் அப்துல் லத்தீப் (89). இவர், மலேசியாவில் 55 ஆண்டுகள் மலேயா, அரபி ஆகிய பாடங்களை கற்றுத்தரும் ஆசிரியராக பணியாற்றி உள்ளார். இவரிடம், தற்போது கிழக்கு மலேசியாவில் உள்ள சரவாக் மாநில துணை முதல்வராக இருக்கும் அவாங் தெங்கா அலி ஹஸன் என்பவரும் படித்துள்ளார்.
இந்நிலையில், தனக்கு பாடம் நடத்திய ஆசிரியரான அப்துல் லத்தீப்பை சந்திப்பதற்காக நேற்றுமுன்தினம் தஞ்சாவூருக்கு தனது குடும்பத்துடன் துணை முதல்வர் வந்தார். அவர் பாபநாசம் ராஜகிரி கீழ தெருவில் உள்ள அப்துல் லத்தீப் வீட்டிற்கு சென்றார். அவரிடம், தனது குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைத்து கட்டி தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதுகுறித்து அவாங் தெங்கா அலி ஹஸன் கூறுகையில், ‘எனக்கு பாடம் கற்றுத்தந்த ஆசிரியரை கடந்த 45 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 1968ல் அப்துல் லத்தீப், செகண்டரி ஸ்கூல் டீச்சராக பணிபுரிந்தார். எப்போதும் சுறுசுறுப்பாகவும், நல்ல ஆசிரியராகவும் இருந்தார். அப்போதைய காலகட்டத்தில் இவர் எங்கள் பகுதியில் இருப்பவர்களுக்கு நிறைய நல்லது செய்துள்ளார். ஆசிரியர் அப்துல் லத்தீப் மீது நிறைய மரியாதை இருக்கிறது. இவர் எனக்கு ஆசிரியர் மட்டும் அல்ல, எனது குடும்பத்தில் ஒருவரை போல தான் பார்க்கிறேன். இது எனக்கு கடவுள் கொடுத்த வரம். இன்னும் ஆரோக்கியமாக இவர் இருக்க வேண்டும் என்பது என் ஆசை’ என்றார்.