புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டு முன்பு நியாயவிலைக்கடை ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநிலத்தில் 336 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டன. அதில் 500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து நியாயவிலைக் கடைகளை மீண்டும் திறக்கக் கோரியும், நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரியும் நியாயவிலைக் கடை ஊழியர்கள் தொடர்ந்து பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது குடும்பத்துடன் கதிர்காமத்தில் உள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இல்லத்துக்குச் சென்று வாசல் முன் அமர்ந்தனர். அப்போது டென்னிஸ் விளையாட தயாரான முதல்வர் அவர்களைச் சந்தித்தார். கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற முடியாத நிலையுள்ளதாகக் கூறினார். அதற்கு ஊழியர்கள், ”2 ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊதியமும் இல்லை” என கூறினர்.
இதையடுத்து முதல்வர் கோபமாகி வீட்டுக்குள் சென்றுவிட்டார். முதல்வர் வீட்டு முன்பு நியாயவிலைக் கடை ஊழியர்கள் குடும்பத்துடன் அமர்ந்தை அறிந்த டிநகர் போலீஸார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தினர். ஆனால், ஊழியர்கள் ஜிப்மர் சாலையில் அமர்ந்ததால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
உடனே சாலையில் அமர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தகவல் அறிந்த திமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோர் காவல் நிலையம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் நியாயவிலைக் கடை ஊழியர்கள் குடும்பத்தினருடன் விடுவிக்கப்பட்டனர்.