முசிறி: திருச்சி அருகே ஆம்னி வேன் மீது லாரி மோதி குடந்தை கோயிலுக்கு சென்ற சிறுமி உட்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே சிலுவம்பாளையம் கோனார் பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மனைவி ஆனந்தாயி (57), இவரது மகன் திருமுருகன் (29), அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் மனைவி சகுந்தலா (28), இவரது மகள் தாவனா ஸ்ரீ (9), நாமக்கல் மாவட்டம் உப்புக்குளத்தை சேர்ந்தவர்கள் திருமூர்த்தி (43), அப்பு (எ) முருகேசன்(55), குமாரபாளையத்தை சேர்ந்த முத்துசாமி (58), தனபால் (36), தேத்தா பாளையம் பகுதியை சேர்ந்த முத்துசாமி (58). உறவினர்களான இவர்கள், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருவிடைமருதூர் மகாலிங்கம் கோயிலில் சாமிதரிசனம் செய்வதற்காக வாடகை ஆம்னி வேனில் நேற்றுமுன்தினம் இரவு புறப்பட்டனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சிலுவம்பாளையம் காட்டுப்புத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார்(31) வேனை ஓட்டினார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3.50 மணியளவில் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே திருவாசி என்ற இடத்தில் வந்த போது ஆம்னிவேனும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து கரூரில் உள்ள பேப்பர் மில்லுக்கு மரக்கட்டைகளை ஏற்றிச்சென்ற லோடு லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கி உருக்குலைந்து கிடந்தது. இதில் லாரியின் முன்பகுதி சேதமாகியும், 2 டயர்கள் கழன்றும் கிடந்தது.
தகவலறிந்து வாத்தலை போலீசார், ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள் வந்து பார்த்தபோது, வேன் இடிபாட்டுக்குள் சிக்கி முத்துசாமி, ஆனந்தாயி, தாவனா ஸ்ரீ, திருமூர்த்தி, அப்பு (எ) முருகேசன், டிரைவர் சந்தோஷ்குமார் ஆகிய 6 பேரும் இறந்து கிடந்ததும், தனபால், திருமுருகன், சகுந்தலா ஆகிய 3 பேரும் படுகாயத்துடன் உயிருக்கு போராடியதும் தெரியவந்தது. காயமடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து காரணமாக திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் விபத்துக்குள்ளான லாரி, ஆம்னி வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இது குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமாரை (43) கைது செய்தனர்.