சென்னை: ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ திட்டத்தின் கீழ் குஜராத்தில் ஏப்.17முதல் 26-ம் தேதி வரை நடைபெறவுள்ள ‘சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சிக்கான இலச்சினை, மையக்கருத்து பாடலை சென்னையில் மத்திய சுகாதாரத் துறைஅமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார். இலவச பயணத்துக்கு பதிவு செய்வதற்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
குஜராத் – தமிழகம் இடையிலான நல்லுறவை போற்றும் வகையில் ‘சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’ தொடக்க விழா சென்னை கிண்டியில் நேற்று நடந்தது. சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்றார்.
தமிழ்ச் சங்கமம் நிகழ்வுக்கு செல்வதற்கு பதிவு செய்வதற்கான இணையதளம் ( https://saurashtra.nitt.edu), இலச்சினை மற்றும் சங்கம நிகழ்ச்சியின் மையக்கருத்து (தீம்) பாடலை வெளியிட்டார்.
மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், குஜராத் மாநில அமைச்சர்கள் குன்வர்ஜிபாய் பவாலியா, ஜெகதீஸ் விஸ்வகர்மா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சவுராஷ்டிரா மத்திய சபா தலைவர் ராஜேந்திரன், குஜராத்தி சமாஜ் தலைவர் ரமேஷ் பட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:
இந்திய மக்கள் இடையிலான இணைப்பு பாலத்தை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ எனும்திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கினார். இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் காசி தமிழ்ச் சங்கமம் நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து2,800-க்கும் மேற்பட்டோர் சிறப்பு ரயில்கள் மூலம் காசிக்கு சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிலையில், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ திட்டத்தின்கீழ் 2-வது நிகழ்ச்சியாக மத்திய அரசும்,குஜராத் அரசும் இணைந்து ‘சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சியை குஜராத்தில் வரும் ஏப்ரல் 17-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடத்த உள்ளன.
சவுராஷ்டிரா மற்றும் தமிழ் கலாச்சாரத்துடன் இந்த நிகழ்வு நடைபெறும். போர்பந்தர், ராஜ்கோட், துவாரகா, ஏக்தா நகர் ஆகிய பகுதிகளை மையமாக வைத்து இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு தமிழகத்தில் உள்ள சவுராஷ்டிரா தமிழ் மக்களை அழைப்பதற்காகவே நானும்,குஜராத் மாநில அரசின் 2 அமைச்சர்களும் இங்கு வந்துள்ளோம். இதற்காக மதுரை, திருநெல்வேலி, சேலம், பரமக்குடி உள்ளிட்ட8 நகரங்களுக்கு 25, 26-ம் தேதி மத்திய அமைச்சர்கள், குஜராத் மாநில அமைச்சர்களும் வருகை தருகின்றனர். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக திருச்சி என்ஐடி செயல்படுகிறது.
இதில் பங்கேற்க விரும்பும், தமிழகத்தில் உள்ள சவுராஷ்டிரா மக்கள், தமிழ் மக்கள் புதிதாகதொடங்கப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நிறைய பேர் பதிவு செய்யும்பட்சத்தில், குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்டு, அழைத்துச் செல்லப்படுவார்கள்.
ஒரு ரயிலுக்கு 300 பேர் என மொத்தம் 10 ரயில்களில் 3,000 பேர் தமிழகத்தில் இருந்து குஜராத்துக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். மதுரையில் இருந்து முதல் சிறப்பு ரயில் ஏப்.14-ம் தேதி புறப்படுகிறது.
செல்வதற்கு 2 நாள், திரும்பி வருவதற்கு 2 நாள், அங்கு 6 நாட்கள் என மொத்தம் 10 நாட்கள். இந்த பயணம் முற்றிலும் இலவசம். 3,000 பேரும் ஒரு பைசாகூட செலவு செய்ய தேவையில்லை. அனைத்து செலவுகளையும் அரசு ஏற்றுக்கொள்ளும். இவர்கள் தவிர மற்றவர்கள் ரயில், விமானம் மூலமாக வரலாம்.
முதல்வருக்கு அழைப்பு
சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்நிகழ்ச்சிக்கு வருமாறு தமிழகமுதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களையும் அழைக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசும்போது, ‘‘இந்தியாவில் மாநிலங்கள் இடையேகலாச்சார இணைப்பு விழாவை பிரதமர் நடத்துவது பாராட்டுக்குரியது. தமிழக மக்களுக்கு 2-வது வாய்ப்பாக, காசி தமிழ்ச் சங்கமம் முடிந்து, ஓராண்டுக்குள் சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்வு கிடைத்துள்ளது” என்றார்.