சென்னை: சொத்தின் மீது ஏதாவது பிரச்சினை ஏற்படும் என்று கருதி, வீட்டு உரிமையாளர்கள் 91 லட்சம் பேர் மின் இணைப்புடன் வாடகைதாாரர்கள் பிரிவி தங்களது ஆதார் எண்ணை இணைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியைதமிழக மின் வாரியம் கடந்த ஆண்டுநவ.15-ம் தேதி தொடங்கியது. இதற்காக தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன. டிச. 31-ம் தேதிகடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், பெரும்பாலான மின் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்புடன் இணைக்காததால், அவர்களின் கோரிக்கையை ஏற்று காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இறுதியில் பிப். 28-ம் தேதியுடன் இந்த காலக்கெடு நிறைவடைந்தது.
இந்நிலையில், வீட்டு உரிமையாளர்கள் 91 லட்சம் பேர் தங்களை வாடகைதாரர்கள் என்றுகூறி, வாடகைதாரர் பிரிவில் ஆதார்எண்ணை இணைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறும்போது, “வீட்டு உரிமையாளர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால், தங்களது சொத்துக்கு ஏதேனும் பிரச்சினை வரும் என்று கருதி, தங்களது ஆதார் எண்ணை வாடகைதாரர்கள் பிரிவில் இணைத்துள்ளனர். மின் ஆளுமை முகமை வாயிலாக ஆதார் இணைப்பு விவரங்களை சரிபார்த்த போது இந்த விஷயம் தெரியவந்துள்ளது.
மொத்தமுள்ள 2.67 கோடி மின்நுகர்வோரில் 95 லட்சம் பேர் வாடகைதாரர் பிரிவை தேர்வு செய்து,ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இதில் 4 லட்சம் பேர் மட்டுமே உண்மையான வாடகைதாரர்கள். எஞ்சிய 91 லட்சம் பேர் வீட்டு உரிமையாளர்கள்.
எனவே, தற்போது இவர்களது வீடுகளில் ஆய்வு செய்யும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்” என்றனர்.