சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் (மார்ச் 20, 21) சில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று சில இடங்களிலும், நாளை ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 22, 23-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மார்ச் 19-ம் தேதி (இன்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, தஞ்சாவூர் மாவட்டம் கீழ் அணைக்கட்டில் 7 செ.மீ., தேனி மாவட்டம் மஞ்சளாறு, சேலம் மாவட்டம் மேட்டூர், செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.