கனவுகளை விட்டு விடாதீர்கள் கெட்டியாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என இளைஞரணி நிர்வாகிகளிடம் பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைகழக வளாகத்தில் பாஜக இளைஞரணி சார்பில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற அவைகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எவ்வாறு நடக்கிறது என்பது குறித்து மாதிரி நாடாளுமன்றம் மற்றும் மாதிரி சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், கரு.நாகராஜன், கார்த்தியாயினி, பொன் பாலகணபதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை… இளைஞர்களை பொருத்தவரை நான் ஒன்றை மட்டும்தான் சொல்லிக் கொள்வேன், தட்டுங்கள் திறக்கப்படும், திறக்கவில்லை என்றால் உடையுங்கள், யார் உங்களை மடை போட்டு தடுக்க முயற்சித்தாலும் அந்த மடையை உடைத்து முன்னேறுங்கள். இந்த கூட்டத்தை நடத்தி உங்களது நாக்கில் தேனை வைத்துள்ளனர். இதில், உங்களுக்கு ஆசை வர வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் உங்களுடைய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக நீங்கள் வரவேண்டும் என ஆசை வையுங்கள். அதற்கு நீங்கள் உழைக்க வேண்டும், வெறும் ஆசை மட்டும் வைத்தால் போதாது அதனை படிப்படியாக முன்னேற்ற வேண்டும்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 15 பேரை தேர்வு செய்து இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம், இதன் செலவுகள் அனைத்தையும் கட்சியே ஏற்றுக் கொள்ளும், நாளை சட்டமன்ற உறுப்பினர்களாகும் கனவுகளை விட்டு விடாதீர்கள். கெட்டியாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM