அ.தி.மு.கவுடன் மீண்டும் கூட்டணி வைத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று சமீபத்தில் சென்னையில் நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாக வெளியான தகவல் பா.ஜ.க-வுக்குள்ளும், அ.தி.மு.க-வுக்குள்ளும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இது அண்ணாமலையின் சொந்தக் கருத்து என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய ஹெச்.ராஜா, “அரங்கத்திற்குள் நடந்த கூட்டத்தில் தலைவர் அப்படி பேசினார், இப்படி பேசினர் என்று வதந்தி பரவுகிறது. அதை பொருட்படுத்த வேண்டாம்.
கூட்டணி பற்றியோ வேட்பாளர்கள் பற்றியோ மாநிலத் தலைவர் முடிவு செய்ய முடியாது. இது குறித்து பாஜக நாடாளுமன்றக் குழு மட்டுமே விவாதித்து முடிவு செய்யும். எங்களுடைய கருத்துக்கள் அகில இந்திய தலைமைக்கு தெரிவிக்கப்படும். அதை அவர்கள் அறிவிப்பார்கள்.
நாங்கள் சொன்னதை அறிவித்தாலும் சரி, அவர்களே அறிவித்தாலும் சரி, மத்திய நாடாளுமன்றக் குழுவின் முடிவுதான் இறுதியானது.
பாஜக தொண்டர்களும் ஆதரவாளர்களும் முழுமையான அறிவிப்பு வரும்வரை அமைதியாக இருக்கவும். அதற்கு முன்னதாக கட்டுக்கதைகளை பரப்ப வேண்டாம்.
சமீபத்தில் நான் கோவை சென்றபோது அ.தி.மு.க நிர்வாகிகளுடன் பேசினேன். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
தி.மு.க உடைந்த பானை. இனி ஒட்டாது. இன்னும் விரிசல் ஏற்படும். கருணாநிதிக்கு பிறகு தலைமைக்கு கட்டுப்படும் நிலை இல்லை” என்றார்.