சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதல்நிலை மருத்துவர் அபிஷேக் என்பவர் நோயாளியின் உடல்நிலை குறித்து விவரித்துக் கூறிக் கொண்டிருக்கும் பொழுது நோயாளியின் உறவினர்களால் தாக்கப்பட்டு உள்ளார்.
இதனால், முதுநிலை மருத்துவர்கள் அனைவரும் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசாரிடம் மருத்துவரைத் தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுத் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், இது தொடர்பாகக் கண்டன செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில், “கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த மருத்துவர் அபிஷேக் என்பவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியின் உறவினர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய நோயாளியின் உறவினர்களைத் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் மருத்துவமனைகள் பாதுகாப்புச் சட்டத்தின் படி மருத்துவரைத் தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறையினரிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அதே வேளை மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசுக்குத் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் வேண்டுகோளை விடுத்துக் கொள்கிறது” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.