புதுடெல்லி: பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி,2019-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவான சாமியார் நித்தியானந்தா, கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்தார். அந்நாட்டுக்கு என்று தனிக் கொடி, பாஸ்போர்ட் எல்லாம் வெளியிட்டார். கைலாசாவில் குடியேற ஆன்லைன் மூலமாக விண்னப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.
கைலாசாவுக்கு ஐ.நா மற்றும் அமெரிக்கா அங்கீகாரம் வழங்கியதாக அவர் தெரிவித்தார். இதையொட்டி, சமீபத்தில் அவரது சிஷ்யைகள் சிலர், ஐநா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசியது கவனம் பெற்றது.
ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, தங்கள் கூட்டத்தில் எந்த அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை பேச அனுமதிப்பது வழக்கம். இதைப் பயன்படுத்தி கைலாசாவை ஐ.நா அங்கீகரித்ததுபோல் நித்தியானந்தா தோற்றத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
கைலாசா மற்றும் அமெரிக்காவின் 30 நகரங்கள் இடையே ‘சிஸ்டர்சிட்டி’ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட் டிருப்பதாக கைலாசா இணைய தளத்தில் சமீபத்தில் குறிப்பிடப்பட்டது. அதுவும் மோசடி என்பது தற்போதுவெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கைலாசா நாடு எங்கே இருக்கிறது என்பது குறித்த தெளிவான தகவலைஇதுவரை நித்தியானந்தா வெளியிட்டதில்லை. இந்நிலையில் கைலாசா என்பது எல்லைகள் அற்ற சேவை நோக்கம் கொண்ட தேசம் என்று கைலாசாவின் செய்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, கைலாசாவின் செய்தி அலுவலகம் கைலாசா குறித்த கேள்விக்குப் பதில் அளிப்பதாக அறிவித்தது. அதையொட்டி எழுப்பப் பட்ட கேள்விகளுக்கு அந்த அலுவலகம் பதில் வழங்கியுள்ளது.
அதில் “மால்டா போல் கைலாசா எல்லைகள் அற்ற ஒரு நாடு. கோயில்கள், மடங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் வழியே செயல்படும். உலகஅமைதிக்காக கைலாசா செயல் படுகிறது. வேதங்கள்தான் கைலாசாவின் அரசியலமைப்புச் சட்டம். தர்ம சாஸ்திரம்தான் கைலாசாவின் நீதிமுறை. சனாதன இந்து தர்மப்படிஇந்த நாடு கட்டமைக்கப்பட்டுள்ளது. பண்டைய இந்து நாகரீகத்தின் மறுமலர்ச்சியாக செயல்படுகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நித்தியானந்தா மீதான குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் புனையப்பட்டவை என்று கைலாசா வின் செய்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.