பாட்னா: ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு முஸ்லிம் ஊழியர்களுக்கு பணி நேரத்தில் தளர்வு வழங்கப்படும் என பிஹார் அரசு அறிவித்துள்ளது.
ரம்ஜான் மாதம் வரும் 22-ம்தேதி தொடங்குகிறது. இந்த மாதம் முழுவதும் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்துவார்கள். இந்நிலையில், பிஹார் அரசு இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “ரம்ஜான் மாதம் முழுவதும் முஸ்லிம் அரசு ஊழியர்கள் பணிக்கு 1 மணி நேரம் தாமதமாக வரலாம். இதுபோல பணி நேரம் முடிவதற்கு 1 மணி நேரம் முன்னதாக வீட்டுக்குச் செல்லலாம்” என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறியதாவது: மாநிலத்தில் முதல் முறையாக ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்களுக்கு பணி நேரத்தில் 1 மணி நேரம் தளர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் இதுபோன்ற சலுகை வழங்கப்படுவது சரியல்ல.
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் கொள்கைகளை நிதிஷ் குமார் தலைமையிலான அரசு அமல்படுத்தி வருகிறது. அப்படியானால் முஸ்லிம்களுக்கு வழங்கப்படுவது போல இந்து அரசு ஊழியர்களுக்கு ராம நவமியின்போது இதுபோன்ற தளர்வு ஏன் வழங்கக் கூடாது? இவ்வாறு சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.