‘ஒரே நாடு, ஒரே காவல் சீருடை’ திட்டத்தை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்க மாநில முதலமைச்சரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நேற்று நடந்த கட்சிக்கூட்டத்தில் உரையாற்றுகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக சாடி பேசினார். ‘பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய டிஆர்பி தான் ராகுல் காந்தி’ என்று கட்சியினர் மத்தியில் மம்தா பானர்ஜி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தியை தலைவராக வைத்திருக்க பாரதிய ஜனதா விரும்புகிறது என்று கூறிய மேற்கு வங்க முதல்வர், ராகுல் காந்தி எதிர்க்கட்சியின் முகமாக இருந்தால், பிரதமர் மோடியை யாராலும் விமர்சிக்க முடியாது என்று சாடி பேசியதாக கூறப்படுகிறது. மேலும் அவர், ”பா.ஜ.க.வுக்கு முன் காங்கிரஸ் கட்சியே தலைவணங்குகிறது. மேலும், ராகுல் காந்தி தலைவராக வேண்டும்; ராகுல் காந்தியை ஹீரோவாக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரம் காட்டுவதால்தான் பாஜக நாடாளுமன்றத்தை செயல்பட விடுவதில்லை. நாடாளுமன்றம் வெளிப்படையாக இருக்க வேண்டும். அதானி விவகாரம், எல்ஐசி விவகாரம், எரிவாயு விலை குறித்து விவாதிக்கப்பட வேண்டும். ‘ஒரே நாடு, ஒரே காவல் சீருடை’ திட்டத்தை நாங்கள் ஏற்க மாட்டோம். அதை செயல்படுத்த அனுமதிக்கவும் மாட்டோம்” என்று மம்தா பானர்ஜி கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM