அகமதாபாத்: குஜராத்தில் தற்போது பள்ளி பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. வழக்கம் போல் மாணவி ஒருவரை அவருடைய தந்தை தேர்வு மையத்துக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி சென்று விட்டார். அங்கு சென்ற பிறகுதான் வேறொரு தேர்வு மையத்துக்கு வந்திருப்பது தெரிய வந்துள்ளது. தேர்வுக்கு நேரமாகிக் கொண்டிருப்பதால் பதற்றம் அடைந்தார் மாணவி.
அந்த நேரத்தில் தேர்வு மையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், மாணவி பதற்றத்துடன் இருப்பதைப் பார்த்து விசாரித் துள்ளார். நிலைமையை மாணவி விளக்கி உள்ளார். அப்போது அவருடைய ஹால் டிக்கெட்டை போலீஸ் அதிகாரி வாங்கி பார்த்தார். அதில் 20 கி.மீ. தொலைவில் உள்ள தேர்வு மையத்தின் பெயர் இருந்துள்ளது. உடனடியாக மாணவியை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அந்த தேர்வு மையத்துக்கு விரைந்தார். போலீஸ் வாகனத்தில் ‘சைரன்’ ஒலியை ஒலித்தபடி விரைந்து சென்று சரியான தேர்வு மையத்தை அடைந்தார் போலீஸ் அதிகாரி. அவருக்கு மிகுந்த நன்றி தெரிவித்த மாணவி, தேர்வெழுத மையத்துக்குள் சென்றார்.
இந்த சம்பவங்களை எல்லாம் நேரில் பார்த்த ஆதர்ஷ் ஹெக்டே என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் சுவாரசியமாக வெளியிட்டார். அது சமூகவலை தளங்களில் வைரலாகி பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.