தஞ்சாவூர் அருகே கால்நடை பயிற்சி மருத்துவர் ஒருவர் தான் பணிபுரிந்த கால்நடை மருத்துவமனையில் மாடுகளுக்கு சிகிச்சையளிக்க கூடிய ஷெட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மதுரவாயல் காமாட்சி நகரை சேர்ந்த பத்மநாதன் மகன் வசந்த் சூர்யா (23). தஞ்சாவூர், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் ரெட்டிபாளையம் நால்ரோட்டில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை சார்பில் செயல்பட்டு வரும், பன்நோக்கு கால்நடை மருத்துவ மனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வந்தார். அவருடன் சதீஷ்குமார், சிவராஜ் என்ற பயிற்சி மருத்துவர்களும் தங்கியிருந்தனர்.
இதில் மற்ற இரு மருத்துவர்களும் உள்ளே உள்ள அறையில் தூங்கிய நிலையில், வசந்த சூர்யா வெளியே உள்ள ஹாலில் படுத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மாடுகளுக்கு சிகிச்சையளிக்க கூடிய ஷெட்டில் வசந்த் சூர்யா சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உயிரிழந்த நிலையில் தூக்கில் தொங்கியிருக்கிறார். இதைபார்த்த அந்தப் பகுதியினர் கள்ளப்பெரம்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக வந்த போலீஸார் வசந்த் சூர்யா உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பியதுடன், இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து சிலரிடம் பேசினோம், “உடல் பாதிப்புகளால் சிகிச்சைக்காக அழைத்து வரப்படும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால் நடைகளிடம் பரிவு காட்டி அக்கறையாக சிகிச்சையளிப்பார் வசந்த் சூர்யா. வாயில்லா ஜீவன்களால் தனக்கு வேண்டியதை கேட்க முடியாது, நாம் தான் அவைகளுக்கு தேவையானதை அறிந்து செய்ய வேண்டும் என்பார்.
அப்படிப்பட்டவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர் உடல் தொங்கிய விதம் சந்தேகத்தை கிளப்பும் வகையில் இருந்ததால், கொலை செய்யப்பட்டிருப்பாரா என தெரிகிறது” என்று அந்தப் பகுயில் பேசப்பட்டு வருவதாக தெரிவித்தனர். போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம், “வசந்த சூர்யாவுக்கு குடிப்பழக்கம் இருந்திருக்கிறது. இதனால் அவருக்கும், அவரின் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை நடந்ததால், மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
சனிக்கிழமை இரவும் மது அருந்தியிருந்த நிலையில், அதிகாலை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. கடைசியாக அவர் யாரிடம் போனில் பேசினார் என்ன நடந்தது, எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது” என தெரிவித்தனர்.