திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வெல்பட்டு சாலையைச் சேர்ந்தவர் ஜோசப் மகன் அலெக்ஸ் ஜோசப். இதேபோல், மூஞ்சுக்கல் பகுதியில் மூன்றாவது வீதியை சேர்ந்தவர் சல்மான்.
இவர்கள் இருவரும் மதுக்கரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர். இதற்காக இவர்கள் இருவரும் கல்லூரி அருகே அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில், இவர்கள் இருவரும் இன்று அதிகாலை சக மாணவர் ஒருவரிடம் மாணவரிடம் இருசக்கர வாகனங்களை வாங்கிக்கொண்டு மலுமச்சம்பட்டிக்கு டீ குடிக்க சென்றுள்ளனர். அதன் படி, இருவரும் டீ குடித்து விட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் அறைக்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து இவர்கள் இருவரும் பொள்ளாச்சி-கோவை சாலையில் சென்றுகொண்டிருந்த போது இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக வாகன ஓட்டிகள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.