பாட்னா ரயில்நிலையத்தில் பொறுத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் விளம்பரத்திற்குப் பதிலாக 3 நிமிடங்கள் ஆபாச வீடியோ ஓடியதால், பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா ரயில் நிலையத்தை உள்ளூர் மக்களையும் தாண்டி, ஏராளமான மற்ற மாநில பயணிகளும் அதிகளவில் பயன்படுத்துவது வழக்கம். அந்தவகையில் நேற்று வழக்கம்போல் தங்களது ரயில்களுக்காக பயணிகள் காத்துக்கொண்டிருந்த நிலையில், காலை 9.30 மணியளவில் நடை எண் 10-ல் பொறுத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் விளம்பரத்திற்குப் பதிலாக ஆபாச வீடியோ ஒளிப்பரப்பானது. இதையடுத்து பயணிகள் பலரும், அதனை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து பிளர் செய்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டனர். சில பயணிகள் பதறியடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினர்.
3 நிமிடங்கள் ஆபாச வீடியோ ஓடியநிலையில், உடனடியாக ரயில்வே அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக அங்கிருந்த பயணிகள், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசாரிடமும் புகார் அளித்தனர். பயணிகளின் புகாரையடுத்து, ரயில்வே போலீஸ், விளம்பரம் ஒளிபரப்பும் ஒப்பந்ததாரரான தத்தா கம்யூனிகேஷன் ஏஜென்சியை தொடர்புகொண்டு, ஆபாச வீடியோவை உடனடியாக நிறுத்துமாறு கூறியது.
மேலும், ஆபாச வீடியோவை ஒளிபரப்பிய தத்தா கம்யூனிகேஷன் ஏஜென்சி மீது எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்யப்பட்டு, அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், ரயில்வே கருப்புப் பட்டியலில் ஏஜென்சியை சேர்த்துள்ளதுடன், அபராதமும் விதிக்கப்பட்டு, விசாரணை தனியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆபாச படம் ஓடிய வீடியோவை பிளர் (blurr) செய்து, சமூகவலைத்தளத்தில் அந்த வீடியோ வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM