கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பானது மிகப் பிரதானமாக பேசப்பட்டது. மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பையும் பெற்றது. திமுக அரசு ஆட்சியையும் அமைத்தது. ஆனால் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட குடும்பத் தலைவருக்கான உரிமை தொகை திட்டம் மட்டும் கிடப்பிலேயே போடப்பட்டது. எப்பொழுது தொடங்கப்படும் என கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது.
தொடர்ந்து இது தொடர்பான சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது மக்களிடையே இந்த கேள்வி அதிகமாகவே எழுந்தது. இதனை அடுத்து அங்கு சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடும்பத் தலைவருக்கான உரிமை தொகை அறிவிப்பு வெளியாகும் என அறிவித்திருந்தார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆன மு கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி இந்த திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழகத்தின் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆன அண்ணாதுரையின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கான உரிமைத் தொகை ரூபாய் 1000 வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார். இந்த திட்டத்திற்காக இந்த நிதி ஆண்டில் 7000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இதன் மூலம் அனைத்து குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கும் இந்த தொகை கிடைக்குமா? என்றால் நிச்சயமாக கிடைக்காது என்றே தெரிய வருகிறது.
ஏனெனில் தமிழகத்தில் ஏறக்குறைய 2 கோடி குடும்ப அட்டைகள் இருக்கும் நிலையில், இவர்கள் ஒதுக்கி இருக்கும் 7000 கோடி நிதியானது ஒரு கோடி குடும்பத்திற்கு மட்டுமே கொடுப்பதற்கு சரியாக இருக்கும் என தெரிய வருகிறது. செப்டம்பர் மாதம் முதல் அடுத்த மார்ச் மாதம் வரை, இந்த நிதியாண்டில் ஏழு மாதங்கள் இருக்கும் நிலையில், ஒரு மாதத்திற்கு ஆயிரம் கோடி வீதமாக 7000 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 2 கோடி குடும்ப அட்டைகளில் ஒரு கோடி குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே இந்த உரிமை தொகையானது கிடைக்கும் என தெரிய வருகிறது.
யார் யாருக்கு கிடைக்கும் என்பது, பெறுவதற்கு என்ன என்ன தகுதிகள் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அனைவருக்கும் அறிவித்துவிட்டு, 50% பேருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பானது பொது மக்களிடையே ஏமாற்றத்தை அளித்திருப்பதாகவே தெரிகிறது.