ஜி.கே.வாசன் மோடிக்கும், பாஜகவுக்கும் ஆதரவாக உள்ளதால் தமாகாவினர் அதை விரும்பவில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கார்த்திக் சிதம்பரம் வந்தால் சிறப்பாக செயல்படுவார் என கே.எஸ்.அழகிரி புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார்.
மதுரையில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்து பேசுகையில்…
தமிழகம் முழுவதும் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தோழர்கள் சிறிது சிறிதாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். தமாகாவை எந்த நோக்கத்திற்காக, லட்சியத்திற்காக மூப்பனார் தோற்றுவித்தாரோ அந்த நோக்கத்தில் செயல்படவில்லை. தமாகாவுக்கு 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த நேரத்தில் மூப்பனாரை சந்தித்த வாஜ்பாய் பாஜக அரசுக்கு ஆதரவு கேட்டார்கள்.
ஆனால் மூப்பனார் பாஜகவுக்கு ஆதரவு தரமாட்டோம் எனக் கூறியதோடு, சில காரணங்களுக்காக காங்கிரஸில் இருந்து பிரிந்திருக்கிறோமே தவிர நாங்களும் காங்கிரஸ்காரர்கள் தான், காங்கிரஸ் கொள்கையில் தான் நாங்களும் இருக்கிறோம், எனவே பாஜகவுக்கு ஆதரவு தரமாட்டோம் என மூப்பனார் வாஜ்பாய் அரசை எதிர்த்து வாக்களித்தார். அதனால் தான் அன்று வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.
ஆனால், ஜி.கே.வாசன் சமீப காலமாக மோடிக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு ஆதரவாகவும் செயல்படுவதால் அதை தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பவில்லை. எனவே தமாகாவினர் மெல்ல மெல்ல காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். ஒன்றிரண்டு பேர் தான் அக்கட்சியில் உள்ளனர். அதில் வாசனும் ஒருவர். எனவே தனித்து நிற்காமல் எங்களோடு ஓரணியில் இணையுங்கள் என இப்போதும் அழைக்கிறேன். அவர் காங்கிரஸ் கட்சிக்கு வர வேண்டும் என்பதை கோரிக்கையாகவே வைக்கிறேன்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி கொடுத்தால் சிறப்பாக செயல்படுவேன் என கார்த்திக் சிதம்பரம் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்…
கார்த்திக் சிதம்பரம் கூறியதில் ஒன்றும் தவறில்லை. யாருக்கு பதவியை கொடுத்தாலும் சிறப்பாக செயல்படுவார்கள். எனக்கு முன்பும் நிறைய தலைவர்கள், எனக்குப் பின்பும் நிறைய தலைவர்கள் வர இருக்கிறார்கள். யார் வந்தாலும் செயல்படுவதற்கு தான் உறங்குவதற்கு யாரும் வருவதில்லை. யார் வந்தாலும் வரவேற்கிறோம் கார்த்திக் சிதம்பரம் நன்றாக செயல்படுவார்.
காங்கிரஸ் கட்சியில் தான் அதிக இளைஞர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கொடுத்துள்ளோம். காங்கிரஸ் கட்சியில் ஐந்து இளைஞர்கள்; நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர் என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM