2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றது. அப்போது பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது. அதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “இன்று 2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாளை மார்ச் 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
மார்ச் 22ஆம் தேதி விடுமுறை என்பதால் பட்ஜெட் மீதான விவாதம் வியாழக் கிழமை தொடங்கும். அதாவது மார்ச் 23, 24, மற்றும் மார்ச் 27, 28 ஆகிய நான்கு நாள்கள் பட்ஜெட் தொடர்பாக பொது விவாதங்கள் நடத்தப்பட்டு அமைச்சர்கள் பதிலுரை வழங்குவார்கள்.
மார்ச் 29ஆம் தேதி முதல் மானிய கோரிக்கை விவாதங்கள் தொடங்கி ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடைபெறும்.
காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையும், பின்னர் 4 மணிக்கு அவை மீண்டும் தொடங்கி இரவு 7 அல்லது 8 மணி வரையும் அவை நடைபெறும். அனைத்து நாள்களிலும் கேள்வி நேரம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இருக்கை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இளங்கோவனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுவிட்டது. அவரது மகன் ஈவெரா திருமகன் அமர்ந்த இடத்தில் இளங்கோவன் அமர்வது நெருடலாக இருப்பதாக கூறியதால் வேறு இடம் ஒதுக்கப்பட்டது. அவரை முன் வரிசையில் அமர வைப்பதா, பின் வரிசையில் அமர வைப்பதா என்பதை அந்த கட்சி முடிவு செய்யும்” என்று கூறினார்.