சென்னை: நகர்ப்புறப் பகுதிகளிலும் ஊரகப் பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, முழுமையான சமூக – பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த ‘அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்’ ரூ.1000 கோடியில் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட் 2023-ல் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கான புதிய திட்டங்களையும், அதற்கான நிதி ஓதுக்கீட்டு விவரங்களையும் அவர் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு: சமூக நீதியையும், சமத்துவம் நோக்கிய வளர்ச்சியையும் அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டுள்ள இந்த அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் வளர்ச்சிக்கு உயர் முன்னுரிமை அளித்து வருகின்றது.
> ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் மொத்த உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பான, தரமான தங்குமிட வசதிகளை வழங்கவும், மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரியில் அம்மாணவர்கள் பயன்பெறும் வகையில் நான்கு புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் 100 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் கட்டப்படும். இந்த விடுதிகளின் பராமரிப்புப் பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.
> ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டம் செவ்வனே செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய தனிச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனை ஏற்று, இத்துணைத் திட்டத்தின் செயல்பாட்டிற்கு வலுசேர்க்கும் விதமாக ஒரு சிறப்புச் சட்டத்தை இந்த அரசு இயற்றும். உரிய ஆலோசனைக்குப் பின்னர், அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்படும்.
> பாதாளச் சாக்கடைகளையும், கழிவுநீர் தொட்டிகளையும் மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறை, மானுடத்திற்கே களங்கமாய் விளங்குகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலும் தடுப்பதற்காக, ஒரு புதிய திட்டத்தை அண்மையில் இந்த அரசு தொடங்கியுள்ளது. தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்றி, நவீன இயந்திரங்கள் வாங்க வழிவகை செய்து, இத்திட்டம் தூய்மைப் பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்வதுடன், அவர்கள் வருவாய் ஈட்டிடவும் வழிவகுக்கும்.
முதற்கட்டமாக, இப்பணிபுரியும்போது இறக்க நேரிட்ட இப்பணியாளர்களின் குடும்பங்களுக்கும், இப்பணியில் தற்போது ஈடுபட்டுள்ள நபர்களுக்கும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து பெருநகரச் சென்னை பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். தேவையான திறன் பயிற்சியுடன் இயந்திரங்களையும், பாதுகாப்புக் கருவிகளையும் கொள்முதல் செய்திடவும் சிறப்பு மானியம் வழங்கப்படும். இந்த முன்னோடி முயற்சியின் அடிப்படையில், இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
> அரசு வழங்கும் சுயதொழில் ஊக்குவிப்பு மானியங்கள் மூலம் பயன் பெறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கை, மிகவும் குறைவாகவே உள்ளது. ஆகவே, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வண்ணம், வரும் நிதியாண்டிலிருந்து ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ என்னும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் இயந்திரங்களையும், கருவிகளையும் கொள்முதல் செய்வதற்காக, 35 சதவீதம் மூலதன மானியமும் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். 2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> புதிரை வண்ணார்கள் நல வாரியத்திற்குப் புத்துயிர் அளித்து, வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள், நலப் பணிகளை மேற்கொள்ள 10 கோடி ரூபாய் வழங்கப்படும்.
> நகர்ப்புறப் பகுதிகளிலும் ஊரகப்பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, முழுமையான சமூக-பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த ‘அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டம் வரும் ஐந்தாண்டுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படவுள்ளது.
> இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு 3,513 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. | வாசிக்க > தமிழ்நாடு பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்கள்