அமெரிக்கா, தென் கொரியா ராணுவத்தினர் கூட்டு பயிற்சியை தொடர்ந்து வருகின்றனர். வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் அவ்வப்போது பதற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டு மக்களை போருக்கு தயாராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.
இரானில் பெண்கள் பொது இடங்களில் நடனமாடத் தடையிருக்கும் நிலையில், சமீபத்தில் காம் டவுன் பாடலுக்கு நடனமாடியிருக்கும் இரானில் பெண்களின் வீடியோவை பிரபல பாப் ஸ்டார் செலீனா கோம்ஸ் தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து பாராட்டியிருக்கிறார்.
அமெரிக்காவில் ஜியார்ஜ் ஃப்ளாய்டை (George Floyd) தாக்கிய காவலர் டெரெக் சௌவில் (Derek Chauvin) மீதுள்ள வரி ஏய்ப்பு வழக்கில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், லாகூரில் உள்ள தன்னுடைய வீட்டை சோதனை செய்த காவல் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார். சோதனையின் போது அங்கிருந்த தன் கட்சியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.
ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டாம் என ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவும் சீனாவிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று இரவு மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்திக்கவிருக்கிறார்.
போர்க்குற்றங்களுக்காக ரஷ்ய அதிபர் புதினை கைதுசெய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் ரஷ்ய ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட மரியபோல் நகரத்தைப் பார்வையிட்டார்.
அமெரிக்காவைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர், நேரலை நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மயங்கி விழுந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர்.
சீனா முழுவதும், இன்ஃப்ளூயன்சா தொற்று அதிகரித்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்பட்ட இருவரில், ஒருவருக்குத் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
கனடாவில் பயிலும் இந்திய மாணவர்கள் சிலர், போலி ஆதாரங்களை வழங்கியிருப்பதாக கனடா அரசு அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றத் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இந்தியாவில் உள்ள ஏஜென்ட் ப்ரிஜேஷ் மிஷ்ரா என்ற நபரால் ஏமாற்றப்பட்டிருப்பதாக கூறியிருக்கின்றனர்.