தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஐஸ்வர்யா. அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மிகப்பெரிய பிரபலமடைந்தன. இதனைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘வை ராஜா வை’ படத்தை இயக்கினார்.
தற்போது லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஐஸ்வர்யா ‘லால் சலாம்’ திரைப்படப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யா கடந்த ஆண்டு நடிகர் தனுஷுடனான திருமண முறிவுக்குப் பிறகு மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் லாக்கரில் வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான வைர மற்றும் தங்க நகைகள் காணமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுதொடர்பாக ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வீட்டில் பணியாற்றும் பணியாளர்கள் திருடி இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்திருக்கும் அந்த புகார் மனுவில், கடந்த 2019 ஆம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை 3 முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை. சென்னை செயின்ட் மேரி சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீடு என்று லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்தது.
இந்த லாக்கரில் இருந்த நகைகள் பற்றிய விவரம் வீட்டில் பணிபுரியும் மூன்று வேலைக்காரர்களுக்கு தெரியும் என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இந்த புகாரை அளித்திருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இது குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகள் குறித்த விவரம் மூன்று வேலைக்காரர்களுக்கு தெரியும் என்பதால் அவர்கள் மீதும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது.