தமிழக பட்ஜெட் 2023-24 இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் அறிவிப்பு குறித்த பேச்சு தான் பெரிதாக கிளம்பியுள்ளது. வரும் செப்டம்பர் 15ஆம் தேதி இந்த திட்டங்கள் தொடங்கப்படுகிறது. இதற்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியெனில் அந்த தகுதி என்ன? என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து உரிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அரசு ஊழியர்களுக்கு கிடையாது.
வருமான வரி கட்டுவோருக்கு கிடையாது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனப் பல்வேறு விதமான தகவல்கள் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் திமுக 2021 சட்டமன்ற தேர்தலை ஒட்டி அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நெட்டிசன்கள் கையிலெத்துள்ளனர்.
அதில், 7.சமூக நீதி என்ற தலைப்பின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ”அனைவருக்கும்” என்பதற்கு பதிலாக ”தகுதி வாய்ந்த” என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதை சுட்டிக் காட்டி சரமாரியாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். மீம்ஸ்கள், ட்ரோல்கள் என திமுக அரசை விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் ரூ.1,000 விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது திமுகவின் நம்பிக்கை துரோகம் எனக் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் நகை கடன் ரத்து என உருட்டியது போல, இது ஒரு உருட்டு எனக் குறிப்பிட்டுள்ளனர்.
ஏனெனில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க் கடன்கள், நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடகு வைத்து நகைக் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று அரசாணை வெளியிட்டு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதேபோல் குடும்ப தலைவிகளுக்கான உரிமைத் தொகையும் என விமர்சனம் செய்து வருகின்றனர்.