கடைசியாக நீங்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றபோது, பணம் எடுக்கும் போது, 2000 ரூபாய் நோட்டுகள் எப்போது கிடைத்தது என்பதை ஞாபக படுத்தி பாருங்கள். 2000 ரூபாய் இளஞ்சிவப்பு நோட்டுகள் பார்ப்பது அரிதாகிவிட்டது என்று பெரும்பாலானோர் கூறுகின்றனர். புழக்கத்தில் இருந்தும் 2000 ரூபாய் நோட்டை மக்கள் பார்க்க முடியவில்லை. மேலும் ஏடிஎம்கள் மூலம் வங்கிகள் 2000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதா என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதை அரசு அதனை கடுமையாக மறுத்துள்ளது. வங்கிகளுக்கு இதுபோன்ற எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி நேரத்தில் எம்பி சந்தோஷ் குமார், ஏடிஎம்கள் மூலம் ரூ.2000 நோட்டுகளை விநியோகிக்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதா என்று நிதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் நிதியமைச்சர், வங்கிகளுக்கு இதுபோன்ற எந்த உத்தரவையும் ரிசர்வ் வங்கி வழங்கவில்லை என்று கூறினார். 2000 ரூபாய் நோட்டுகளை ஆட்டோமேட்டட் டெல்லர் மெஷினில் (ATM) நிரப்பக் கூடாது என்று வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றார். கடந்த கால பயன்பாடு, நுகர்வோர் தேவைகள் மற்றும் பருவகால போக்குகளை மனதில் கொண்டு, ஏடிஎம்களில் எவ்வளவு தொகை மற்றும் மதிப்பை வைத்திருக்க வேண்டும் என்பதை வங்கிகளே தீர்மானிக்கின்றன என்று நிதியமைச்சர் கூறினார்.
2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி எப்பொழுது தடை விதித்துள்ளது என்று நிதியமைச்சரிடம் கேட்கப்பட்டது. எனவே இந்த கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர், ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையின்படி, 2019-20 முதல் 2000 ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வழங்குவதற்கான கோரிக்கை இல்லை என்று கூறினார். முன்னதாக 2021 டிசம்பரில் கூட, 2018-19 முதல், 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிட புதிய உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை, எனவே ரூ 2,000 நோட்டுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
பணமதிப்பிழப்புக்குப் பிறகு 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்ட நிலையில், 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லை என்றும், இந்த ரூபாய் நோட்டுகள் கருப்புப் பணமாக மாற்றப்பட்டதா என்றும் அரசிடம் கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர், அத்தகைய தரவு எதுவும் கிடைக்கவில்லை என்று கூறினார். ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையின்படி, மார்ச் 2017 இறுதியில் ரூ.9.512 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும், இது மார்ச் 2022-ல் ரூ.27.057 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.