மதுரை: தமிழக அரசின் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு இல்லாதது பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “தமிழகத்தில் சுமார் 6 லட்சம் ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களிடம் இருந்து பங்கு தொகையாக சுமார் ரூ.60 ஆயிரம் கோடியை அரசாங்கம் பிடித்து வைத்துள்ளது. இந்நிலையில், திமுக அரசின் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி இந்த பட்ஜெட்டில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை பெரிதும் எதிர்பார்த்த நிலையில் அறிவிக்கப்படாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
கடந்த 15 ஆண்டுக்குமேல் ஊதிய இழப்பை சந்தித்து வரும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் குறித்தும் அறிவிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது. அதேவேளையில் அரசுப்பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு படிக்கும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் 500 கோடி மதிப்பீட்டில் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்படுவது மகிழ்ச்சியாக இருந்தாலும் இது அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு மறுக்கப்படுவது வருத்தத்துக்குரியதாகும்.
மதுரையில் மெட்ரோ ரயில் சேவை, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.1500 கோடி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதிகள் அமைக்க ரூ.100 கோடி, பல்வேறு துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின்கீழ் இணைத்தது வரவேற்கக்கூடியது.
ஜாக்டோ ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்டங்களாக போராட்டம் நடத்திவரும் நிலையில் எங்கள் கோரிக்கைகள் குறித்து எவ்வித அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லாதது திமுக அரசு எங்களை புறக்கணிப்பதை காட்டுகிறது. நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழக முதல்வர் விதி 110-ன் கீழ் பழைய பென்ஷன் திட்டம் குறித்து அறிவிப்பார் என நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.