புனே,
மராட்டியத்தில் பா.ஜ.க. மற்றும் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி இணைந்து, கூட்டணி அரசு அமைந்து உள்ளது. இதில், முன்னாள் முதல்-மந்திரியான, பா.ஜ.க.வை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் தற்போது துணை முதல்-மந்திரியாக பதவி வகிக்கிறார்.
இவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ். இந்நிலையில், அம்ருதாவுக்கு ரூ.1 கோடி கொடுக்க முன்வந்து, மிரட்டலும் விடுத்து உள்ளார் என்று ஆடை மற்றும் நகை வடிவமைப்பாளரான அனீக்ஷா ஜெய்சிங்கானி என்பவர் மீது அம்ருதா பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
அனீக்ஷா 16 மாதங்கள் தன்னுடன் தொடர்பில் இருந்ததுடன், வீட்டுக்கும் வந்து சென்றுள்ளார் என எப்.ஐ.ஆரில் தெரிவித்து உள்ளார். அந்த புகாரில், தன்னிடம் அனீக்ஷா அவரது நகைகள், ஆடைகளை அணிந்து கொண்டு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் தனக்கு வருவாய் கிடைக்க உதவியாக இருக்கும் என பேசி, அம்ருதாவை அனீக்ஷா தனது வழிக்கு கொண்டு வந்து உள்ளார்.
இந்நிலையில், அனீக்ஷாவின் தந்தை தொடர்புடைய குற்ற வழக்கு ஒன்றில் தன்னை தலையிட கோரியும், அதற்கு தனக்கு லஞ்சம் கொடுக்க அவர் முனைந்ததுடன், மிரட்டலும் விடுத்து உள்ளார் என புகாரில் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் அனீக்ஷாவின் தந்தை அனில் ஜெய்சிங்கானிக்கும் தொடர்பு உள்ளது என மலபார் ஹில்ஸ் காவல் நிலையத்தில் அம்ருதா புகார் அளித்து உள்ளார்.
தோழி ரூ.1 கோடி கொடுக்க முன்வந்த பின், அதில் ஏதோ பெரிய விவகாரம் இருக்கிறது என அதிர்ச்சி அடைந்து அனீக்ஷாவை, அம்ருதா தவிர்க்க தொடங்கினார். அவரது தொலைபேசி எண்ணையும் தவிர்த்து உள்ளார்.
இதனால், பல வீடியோ காட்சிகள், குரல் பதிவுகள் மற்றும் பல்வேறு குறுஞ்செய்திகளையும் அம்ருதாவுக்கு அனுப்பி அனீக்ஷா மிரட்டி உள்ளார் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அம்ருதா போலீசில் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில், அனில் ஜெய்சிங்கானியின் மகன் ஆக்ஷன் ஜெய்சிங்கானியை முதலில் போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அனீக்ஷாவை மும்பை போலீசார் கடந்த 16-ந்தேதி கைது செய்தனர். மற்றொரு குற்றவாளியான அனில் ஜெய்சிங்கானியை தேடி வந்தனர்.
இந்த வழக்கில், குஜராத்தில் வைத்து அனில் ஜெய்சிங்கானியை மும்பை போலீசார் கைது செய்து உள்ளனர். அனீக்ஷாவின் தந்தை அனில், சர்வதேச அளவில் கிரிக்கெட் சூதாட்டத்துடன் தொடர்புடைய முக்கிய புள்ளியாவார்.
அவர் 8 ஆண்டுகளாக போலீசின் பிடியில் சிக்காமல் தப்பி வருகிறார். அம்ருதாவுடன், அனீக்ஷா 2 ஆண்டுகளாக தொடர்பில் இருந்து உள்ளார் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
இதில், அனிலுக்கு எதிராக 14 முதல் 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன என குற்ற பிரிவு போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார். வேறு எந்த தகவலையும் வெளியிட அவர் மறுத்து விட்டார்.