காரெல்லாம் வச்சி கடத்திருக்கோம்.. பெட்ரோல் செலவுக்காவுது 1500 ரூபாய் தாண்ணா..! ஒரு அப்பாவி கிட்னாப்பர்ஸ்

திருவாரூர் அருகே 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு கல்லூரி மாணவன் காரில் கடத்தப்பட்ட நிலையில் தந்தை பணம் கொடுக்க மறுத்ததால், கடத்தப்பட்ட மாணவனை கடத்திய இடத்திலேயே இறக்கி விட்டு சென்ற போது பெட்ரோல் செலவுக்காக வழிப்பறியில் ஈடுபட்டதால் கடத்தல் கும்பல் கையும் களவுமாக போலீசில் சிக்கி உள்ளது..

உங்கள் மகனை கடத்தி வைத்து இருக்கிறோம்… 10 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம்… என்று மிரட்டிய கடத்தல் காரர்களிடம் பதட்டமே இல்லாமல், நான் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவ மாணவிகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஏதாவது ஒரு பிள்ளை என்னை பார்த்துக் கொள்ளும் அதனால் எனது மகனைப் பற்றி எனக்கு கவலை இல்லை என்றும் நீங்கள் கேட்ட பணத்தை கொடுக்க முடியாது என்றும் கூறி கடத்தல் காரர்களை விரக்தி மன நிலைக்கு தள்ளிய சமர்த்தியமான தொழில் அதிபர் விஜயராகவன் இவர் தான்..!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமாரனச் சேர்ந்த தொழிலதிபரான விஜயராகவன் அப்பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். கும்பகோணம் தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி அக்ரி முதலாம் ஆண்டு படித்து வரும் இவரது மகன் தனது நண்பன் வீட்டு திருமணத்துக்கு சென்றுள்ளார். அங்கு கல்யாண மாப்பிள்ளை தனது நண்பர்களுக்கு மது விருந்து வைப்பதற்காக 5000 ரூபாயை விஜயராகவனின் மகனிடம் கொடுத்து அனுப்பி உள்ளார்.

பணத்தை கொண்டு வந்திருப்பது செல்வந்தர் விஜயராகவனின் மகன் என்பதை தெரிந்துகொண்ட மாப்பிள்ளையின் குடிகார கூட்டாளியான நெடுமாறன் என்பவர், உடனடியாக ஒரு பிளான் போட்டு அங்கிருந்த தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மாணவனை காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளார்.

மகனை கடத்தி வைத்திருப்பதாக கூறி தந்தை விஜயராகவனுக்கு தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டிய போது, பதட்டமில்லாமல் பேசிய அவர் நான் காவல்துறையிடம் புகார் அளித்து என் மகனை மீட்டுக் கொள்கிறேன் என்று கூறியதால் விரக்தி அடைந்த கடத்தல் கும்பல் மாணவனை கடத்திய இடத்திலேயே கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர். மாணவனை காரில் இருந்து கீழே இறக்கி விட்டு விட்டு வலங்கைமானுக்கு திரும்பிய சென்ற போது காருக்கு பெட்ரோல் போடுவதற்காக சூரிய ராகவன் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ‘ 1500 ரூபாயை வழிப்பறி செய்துள்ளனர்.

இதுகுறித்து சூரியராகவன் வலங்கைமான் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வலங்கைமானை சேர்ந்த நிவாஸ் , சந்தோஷ் குமார், விருப்பாச்சிப்புரம் விக்னேஷ்வரன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் வலங்கைமான் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தொழிலதிபர் விஜயராகவன் மகனை கடத்திச் சென்று இறக்கி விட்டதும் இந்த கும்பல் தான் என்பது தெரிய வந்தது.

இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய விருப்பாச்சி புரத்தைச் சேர்ந்த நெடுமாறன் என்பவர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 10 லட்சம் ரூபாய்க்கு ஸ்கெட்ச் போட்ட கடத்தல் கும்பல், கடைசியில் 1500 ரூபாய் வழிப்பறிக்காக காவல்துறையில் சிக்கிய சம்பவம் பொது மக்களிடம் நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.