சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் “ராயல் பான் ஷாப்” என்ற கடையில் வெளிப்படையாக கஞ்சா, குட்கா, பான் மசாலா பொருட்கள் விற்கப்படுவதாகவும், இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தீய போதை பழக்கங்களுக்கு அடிமையாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த கடையில் போதை வஸ்துகள் சகஜமாய் விற்பனை செய்யப்படுவதை அறிந்து, பலரும் இக்கடையை நோக்கி படையெடுக்கும் சூழல் அதிகரித்துள்ளதாகவும் அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.
போலீஸாருக்கு லஞ்சம்
இது தொடர்பாக நேயர் ஒருவர் நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு, அனுப்பிய பிரத்யேக வீடியோவில், தடை செய்யப்பட்ட மாவா பொட்டலங்களை ஒருவர் வாங்குவது போலவும், அந்த கடைக்காரர் போதைப் பொருட்களை விற்பனை செய்ய R 10 எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுப்பதாக அவரே கூறுகிறார். ஆனால், காவல் நிலையம் தரப்பில் 20 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாகவும் கடைக்காரர் சலித்துக்கொள்கிறார்.
பிரத்யேக வீடியோ:
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் கஞ்சா மற்றும் போதை பழக்கங்களுக்கு அடிகையாவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு இதனை கவனத்தில் கொண்டு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
முதல்வருக்கு கோரிக்கை
வேலியே பயிரை மேய்ந்த கதையாய், லஞ்சம் வாங்கிக்கொண்டு குட்கா பொருட்களை விற்பனை செய்ய அனுமதித்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் மற்றும் காவல்துறை டிஜிபிக்கு அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரவுடிசத்தை குறைக்க தீவிரம் காட்டுவதைப் போல போதை பொருட்களையும் ஒழிக்க அதே கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.