மதுரை: மதுரை மாநகராட்சியில் கட்சி பாராபட்சமில்லாமல் பெண் கவுன்சிலர்களின் வார்டுகளில் அவர்கள் கணவர், குடும்ப உறுப்பினர்கள் தலையீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதிகாரிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
பெண்களும் அதிகார அமைப்புகளில் பங்கேற்கும் விதமாக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் 2016-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், பஞ்சாயத்துகளில் பெண்கள் உள்ளாட்சி அமைப்பு தலைவர்ராகவும், கவுன்சிலர்களாகவும் அதிகாரத்திற்கு வந்துள்ளனர். மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 52 பெண் கவுன்சிலர்கள், 48 ஆண் கவுன்சிலர்கள் உள்ளனர்.
இதில், ஏற்கெனவே கவுன்சிலர்களாக இருந்த பெண்களுக்கு போதிய அனுபவம் உள்ளதால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அவர்களால் தன்னிச்சையாக இயங்க முடிகிறது. ஆனால், புதிதாக வந்த பல பெண் கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் குறித்தும், அவர்களுக்கான அதிகாரமும் தெரியாத சூழலே செயல்படுகின்றனர். வார்டுகளில் யாருக்கு கவுன்சிலர் பொறுப்பு வழங்கப்பட்டதோ அவர்கள்தான் மாநகராட்சி நிர்வாகப் பணியை செய்ய வேண்டும். அவர்களது கணவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பின்னால் இருந்து வழிகாட்டலாம். அதில் எந்த தவறுமில்லை என்ற போதிலும், அதன் எல்லையும் ஒரு கட்டத்தில்தான் இருக்க வேண்டும்.
மதுரை மாநகராட்சியில் கவுன்சிலர்கள் பொறுப்பேற்ற முதல் 3 மாதத்தில் பெண் கவுன்சிலர்கள் குடும்பத்தினர் தலையீடும், நெருக்கடியும் அதிகமாக இருந்தது. அதனால், வார்டுகள், மண்டல அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி மைய அலுவலகம் வரை பல்வேறு பிரச்சனைகளும், சர்ச்சைகளும் ஏற்பட்டது. இதில், திமுக பெண் கவுன்சிலர்கள் குடும்பத்தினரால் வந்த பிரச்சனைகள் அதிகமாக இருந்ததால் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட முடியாமல் தவித்தனர்.
ஒரு கட்டத்தில் நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மேயர் மற்றும் மாநகராட்சி திமுக கவுன்சிலர்களை அழைத்து, கவுன்சிலர்கள்தான் நேரடியாக மாநகராட்சி நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், அவர்கள் குடும்பத்தினர் யாரும் தலையீடக்கூடாது, என்றும், அப்படி தலையீடுவது தெரிய வந்தால் கட்சி தலைமையிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். அதன்பிறகு ஒரளவு வார்டுகளில் பெண் கவுன்சிலர்கள் குடும்பத்தினர் தலையீடு குறைந்தது.
இந்நிலையில், சமீப காலமாக மீண்டும் பெண் கவுன்சிலர் வார்டுகளில் அவர்கள் கணவர், குடும்ப உறுப்பினர்கள் தலையீடும், நெருக்கடியும் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண் கவுன்சிலர்களுடைய மொத்த அதிகாரத்தையும், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் எடுத்துக் கொள்கின்றனர். பல வார்டுகளில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள், குடும்ப உறுப்பினர்கள்தான் மாநகராட்சிப் பணிகளை முன்னின்று செய்கின்றனர். அவர்கள்தான் அதிகாரிகளுக்கு உத்தரவிடுகின்றனர். அதிகாரிகள் கூறும் ஆலோசனைகளை கேட்பதில்லை. பெண் கவுன்சிலர்களுக்கு போன் செய்தால் கூட அவர்கள் கணவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களே எடுத்து பேசுகின்றனர்.
கட்சி வேறுபாடுகளின்றி பெரும்பாலான கட்சி பெண் கவுன்சிலர்கள் வார்டுகளிலும் இந்த நிலைதான் நீடிக்கிறது. அதிகாரிகளிடம் சில நேரங்களில் மரியாதை குறைவாக பேசி விடுகின்றனர். அதேநேரத்தில் மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 5 மண்டலங்களில் 4 பெண் கவுன்சிலர்கள் மண்டலத் தலைவர்களாக உள்ளனர். மொத்தமுள்ள 7 குழு தலைவர்களில் 4 பெண் கவுன்சிலர்கள் குழு தலைவர்களாக உள்ளனர். இவர்களில் ஒருசிலரை தவிர மற்ற பெண் கவுன்சிலர்கள் அனைவரும் மிக சிறப்பாக செயல்படுகின்றனர்.
திரைமறைவில் இவர்கள் குடும்ப உறுப்பினர்கள் வழிகாட்டுதல், தலையீடு இருந்தாலும் மண்டல அலுவலகங்களில், வார்டுகளில் அவர்கள் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக பொதுமக்களே வரவேற்கின்றனர். அதுபோல், ஆரம்பத்தில் தடுமாறிய மேயர் இந்திராணி, தற்போது மாமன்ற கூட்டம், ஆய்வுக்கூட்டங்கள் மட்டுமில்லாது வார்டுகளில் நிலவும் பிரச்சனைகளையும் அவரே சிறப்பாக கையாளத் தொடங்கியிருக்கிறார்.
உள்ளாட்சிப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழக அரசு இட ஒதுக்கீடு என்பதை கொண்டுவந்து செயல்படுத்துகிறது. ஆனால், மதுரை மாநகராட்சியில் பெண் கவுன்சிலர்கள் குடும்ப உறுப்பினர்கள் தலையீடு, நெருக்கடியால் பெண் பிரதிநதிகளின் இடஒதுக்கீடு அதிகாரமும் பெயரளவுக்குதான் இருக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ”மேயரிடம் கூறியுள்ளோம். அவர் கட்சி கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்” என்றார்.