இந்து – முஸ்லிம் விவாதத்தில், இந்தியாவிலிருக்கும் முஸ்லிம்கள் இந்துக்களே, அவர்கள் முஸ்லிம் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் மதம் மாற்றப்பட்டவர்கள் என்ற வாதத்தை ஆர்.எஸ்.எஸ் முன்வைத்துவருகிறது. இப்படியான சூழலில், பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் காட்சியைச் சேர்ந்த அமைச்சர் அசோக் சவுத்ரி, இந்தியாவிலிருக்கும் 90 சதவிகித முஸ்லிம்கள், தீண்டாமை மற்றும் சாதிய கொடுமையால் மதம் மாறியவர்களே என்று தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக பீகாரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, `முஸ்லிம் ஊழியர்கள், அதிகாரிகள் ரம்ஜான் மாதத்தில், அலுவலகங்களுக்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னதாகவே வந்துவிட்டு, வேலை நேரம் முடிவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே செல்லலாம்’ என்று கடந்த வெள்ளிக்கிழமையன்று அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க, நவராத்திரிக்கு ஏன் இதுபோன்று செய்யப்படவில்லை கேள்வியெழுப்பியது. இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்துப் பேசிய அமைச்சர் அசோக் சவுத்ரி, “இதுபோன்ற தளர்வுகள் என்பது சிறுபான்மையினருக்கு எப்போதும் வழங்கப்படுவதுதான். இந்து – முஸ்லிம் பற்றி, எல்லா நேரங்களிலும் ஏதாவது ஒன்றை பா.ஜ.க கூறிக்கொண்டுதான் இருக்கிறது.
அனைத்துப் பிரச்னைகளையும், இந்து – முஸ்லிம் கோணத்திலேயே பா.ஜ.க பார்க்கிறது. இங்கிருக்கும் முஸ்லிம்கள் யார்… அவர்களொன்றும் அமெரிக்காவிலிருந்தோ, லண்டனிலிருந்தோ, ஏன் ஆப்கானிஸ்தானிலிருந்தோகூட வரவில்லை. 90 சதவிகித முஸ்லிம்கள், தீண்டாமை மற்றும் சாதிய அமைப்பால் மதம் மாறியவர்கள்தான்” என்றார் .