சனாதன இந்து தர்ம எழுத்து மாநாட்டுக்கு அனுமதி அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற வேலையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அவரின் அந்த மனுவில், “தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஒன்று மற்றும் இரண்டாம் தேதிகளில் ‘சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு’ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் ஆதீனங்கள், சன்னியாசிகள், ஆன்மீகப் பெரியோர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த மாநாட்டிற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று போலீசாரிடம் மனு அளித்தோம்.
ஆனால் இதுவரை போலீசார் அனுமதி வழங்கவில்லை. எனவே இரண்டு நாள் நடக்கக்கூடிய இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று, வசந்தகுமார் அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும் தூத்துக்குடியில் போராட்டம், மாநாடு, பேரணி அனுமதி வழங்கினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்.
ஏற்கனவே ஆர்எஸ எஸ் பேரணிக்கும் அனுமதி கொடுக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் பேரணி நடத்தவும் அனுமதி வழங்கப்படுவதில்லை.
இதன் அடிப்படையில் தான் இந்து தர்ம எழுச்சி மாநாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வசந்தகுமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.