விருதுநகர்: விருதுநகரில் கோயில் திருவிழாவுக்கு அழைத்து வரப்பட்ட யானை, லாரியில் இருந்து கீழே இறக்கியபோது தவறி விழுந்து காயமடைந்தது. இதற்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை இறந்தது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் ஷேக்முகமது. இவர் லலிதா என்னும் யானையை பராமரித்து வந்தார். கடந்த ஜனவரி 1ம் தேதி விருதுநகர் ராமர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க, யானை லாரியில் கொண்டு வரப்பட்டது. விருதுநகரில் மதுரை ரோட்டில் உள்ள காலியிடத்தில் லாரியில் இருந்து இறங்கியபோது சரிந்து விழுந்த யானை காயமடைந்தது. இதையடுத்து கிரேன் உதவியுடன் யானையை தூக்கினர். மறுநாள் மீண்டும் யானையை ராஜபாளையத்திற்கு லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர். அப்போது உடல் நலம் குன்றியதால், பாதி வழியில் திருப்பி மீண்டும் யானை விருதுநகருக்கு கொண்டு வரப்பட்டது.
நகரில் ரயில்வே காலனியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. யானை தவறி விழுந்த நாள் முதல், வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், உரிமையாளரால் யானை மோசமாக பராமரிக்கப்பட்டு தவறி விழுந்தது. எனவே, யானையை வனத்துறை கைப்பற்றி பராமரிக்க வேண்டும். இதற்கான செலவினத்தை யானை உரிமையாளரிடம் வசூலிக்க வேண்டும். யானையின் உடல்நிலை சரியாகும் வரையில், தற்போதுள்ள இடத்திலேயே இருக்க வேண்டும் என வனத்துறை தலைமை பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ்ரெட்டி கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டு இருந்தார். இதை தொடர்ந்து வனத்துறையினர் யானையை பராமரித்து வந்தனர். கால்நடை மருத்துவ குழுவினரும் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், உடலின் ஏற்பட்ட படுக்கை புண் மற்றும் காயங்களால் சிகிச்சை பலனின்றி இன்று காலை யானை உயிரிழந்தது.