தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியத்தில் நாகல்குளம் கிராமம் இருக்கிறது. இந்தக் கிராமத்தின் தலைவராக கோமதி நாச்சியார் செயல்பட்டு வருகிறார். அங்கிருக்கும் 4-வது வார்டில் கடந்த வாரத்தில் வாருகால் அமைத்திருக்கின்றனர். பேவர் பிளாக் சாலையின் நடுவில் வாருகால் அமைக்கப்பட்டிருப்பதால் சாலையைப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
வார்டு உறுப்பினரான ஹெலன் அனுஷியா என்பவருக்குத் தெரியாமலே இந்த வாருகால் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டதற்கு அவரும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். தனக்குத் தெரியாமலே இரண்டே முக்கால் லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் ஒடை அமைக்கப்பட்டிருப்பதாகவும், இது சாலையின் நடுவே இருப்பதால் தனக்கு மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தியிருப்பதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்திருக்கிறார்.
சாலையின் நடுவில் கழிவு நீர் வெளியேறுவதற்கான ஓடை அமைத்திருப்பதை, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சுரேஷ்குமார் என்பவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலானதால் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து வருகிறார்கள். பொதுமக்கள் நடக்க முடியாதபடி வாருகால் அமைக்கப்பட்டிருப்பதை அகற்றிவிட்டு சாலையின் ஓரத்தில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
வீடியோவை பதிவிட்ட சுரேஷ்குமாரிடம் பேசினோம். “விவசாயத்தைச் சார்ந்த மக்கள் அதிகமாக வசிக்கும் இந்தக் கிராமத்தில் நிறைய பேர் ஆடு, மாடுகள் வளர்க்கிறார்கள். இரண்டு தெருக்களை இணைக்கும் சாலையின் நடுவில் வாருகால் அமைத்ததால் வயதானவர்கள், பெண்களால் நடக்கக்கூட முடியவில்லை. அந்த சாலையைக் கடந்துதான் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அதனால் பள்ளிக் குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு நான் வயலுக்குப் போய்விட்டு பைக்கில் வந்தேன். இரவு நேரத்தில் தெரியாமல் இந்த சாலைக்குள் வந்துவிட்டேன். சாலையின் நடுவில் ஓடை அமைக்கட்டதால் பைக்கில் செல்ல முடியவில்லை. திரும்பி விடலாம் என்றால் வண்டியைத் திருப்ப வழியில்லை. அதனால் மிகுந்த சிரமப்பட்டேன். மறுநாள் காலையில் முதல்வேலையாக அந்த ரோட்டை வீடியோ எடுத்து வெளியிட்டேன். அது வைரலாகிவிட்டது. ஆபத்து ஏற்படும் முன்பாக அதை சரிசெய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம்” என்றார்.
சாலையின் நடுவில் வாருகால் அமைக்கபப்ட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்க வட்டார வல்ர்ச்சி அலுவலரான முருகனை தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பைத் துண்டித்துவிட்டார். நம்மிடம் பேசிய பி.டி.ஓ அலுவலகப் பணியாளர்கள், “அந்த வீடியோ வைரலான பிறகுதான் சாலையின் நடுவே வாருகால் அமைக்கப்பட்ட விவரமே எங்களுக்குத் தெரியும். இன்னும் அந்த சாலைக்கான பணம் கொடுக்கப்படவில்லை. அதனால் பணிகளைச் சரிசெய்யச் சொல்வோம்” என்றார்கள்.