ஆதிபுருஷ் மீதான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
பிரபாஸ் நடிப்பில் தற்போது புராண படமாக உருவாகி வருகிறது ஆதிபுருஷ். இந்த படத்தை ஓம் ராவத் என்பவர் இயக்கி வருகிறார். ராமாயணத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தியில் சுமார் 5௦௦ கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. ராமாயணத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிரபாஸ் ராமராக நடித்துள்ளார். ராவணனாக பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், சீதாவாக கீர்த்தி சனான் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் டீசர் வெளியான போது அதில் ராமன், ராவணன் குறிப்பாக அனுமன் குறித்த உருவங்கள் இதில் சித்தரிக்கப்பட்டு இருந்த விதம் சர்ச்சையை கிளப்பியது.
இதையடுத்து வழக்கறிஞர் ஒருவர் இந்த படத்தில் ராமாயணம் பற்றி தவறான விஷயங்களை காட்ட முற்படுகிறார்கள் என்று கூறி இந்த படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் வழக்கு தொடர்ந்த நபரே தற்போது இந்த வழக்கை தான் வாபஸ் வாங்கி கொள்வதாகவும் மனு செய்திருந்தார்..
அதற்கு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் தள்ளிவைக்க முடிவு செய்துள்ளதை தெரிந்து கொண்டதாகவும், இந்த படத்தில் தான் புகாரில் குறிப்பிட்டு இருந்த மாற்றங்களை செய்வதற்கும் சில காட்சிகளை நீக்குவதற்கும் அவர்கள் முன்வந்திருந்தார்கள் என்பதை தெரிந்து கொண்டதாகவும் அதனால் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து இந்த மனுவை ஏற்றுக்கொண்டு இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.