மும்பை: தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம், மும்பை ‛புல்லட்’ ரயில் திட்டத்துக்கான, புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை இடையே, புல்லட் ரயில் இயக்க திட்டமிடப்பட்டு, 2021 ஆக.,ல் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில், தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம், ஐதராபாத்தைச் சேர்ந்த மேகா பொறியியல் மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனம், ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து, மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில், புல்லட் ரயில் நிலையம் அமைப்பது தொடர்பாக, புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இது, ‛‛மும்பை-ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில், கையெழுத்திடப்பட்டுள்ள முதல் ஒப்பந்தம் என,” தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதன்படி, தரைமட்டத்தில் இருந்து, 24 அடி ஆழத்தில் நிலத்தடியில் ரயில்நிலையம் அமைய உள்ளது.
மொத்தம், 4.85 ஹெக்டேர் பரப்பளவில், 3,681 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள, இந்த ரயில் நிலையம், பணிகள் துவங்கிய நாளில் இருந்து, 54 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில், ஆறு நடைமேடைகள் அமைய உள்ளன.
ஒவ்வொரு நடைமேடையும், 415 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட உள்ளதுடன், பொது மக்கள் வசதிக்காக, மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் சாலைகளுடன் இணைக்கப்பட உள்ளன.
நடைமேடை, கான்கோர்ஸ், சர்வீஸ் ப்ளோர் என, மூன்று தளங்களுடன், இரண்டு நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் அமைய உள்ளன.
பயணிகள் சிரமமின்றி நடந்து செல்ல, போதிய இடம் இருக்கும் விதமாகவும், ரயில் நிலையத்தில் வெளிச்சத்துக்காக, பிரத்யேகமாக ஸ்கைலட்களும் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.
தவிர, டிக்கெட் கவுன்டர்கள், பயணியர் காத்திருப்பு பகுதிகள், கழிப்பறைகள், புகைப்பிடிக்கும் அறைகள், சில்லறை விற்பனை கடைகள், கண்காணிப்பு கேமராக்கள், பொது தகவல் அறிவிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளும் அமைக்கப்பட உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்