கர்நாடகத்தில் வரும் மே மாதம் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் முதற்கட்டமாக, மதச்சார்பற்ற ஜனதா தளத்தினர் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர். காங்கிரஸ், பா.ஜ.க-வினர் மொத்தமுள்ள, 224 தொகுதிகளுக்கு தங்கள் வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர்.
இந்த நிலையில், இன்று மதியம் ஆம் ஆத்மி கட்சியினர் தங்களின், 80 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டிருக்கின்றனர். மற்ற கட்சியினருக்கு ‘டஃப்’ கொடுக்கும் வகையில், வேட்பாளர்களைத் தேர்வுசெய்திருக்கின்றனர். மாநில அளவிலும், தொகுதிக்குள்ளும் ‘ஃபேமஸ்’ ஆக இருக்கிற முன்னோடி விவசாயிகள், இளைஞர்கள், வக்கீல்கள், சூழல் ஆர்வலர்கள் என, பல துறைகளைச் சார்ந்த ஆளுமைகளை வேட்பாளர்களாக அறிவித்திருக்கின்றனர்.
இதில், குறிப்பாக கர்நாடகா மக்களால் அறியப்படும் நபர்களான, நடிகர் டென்னிஸ் கிருஷ்ணா, முன்னாள் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர், முன்னாள் பெங்களூர் மாநகராட்சி அதிகாரி மத்தய், சில டாக்டர்கள் உட்பட பலதுறைகளில் ஆளுமைகளாக உள்ளவர்களைத் தேர்வுசெய்திருக்கின்றனர்.
விவசாயிகளுக்கு முன்னுரிமை!
வேட்பாளர் பட்டியல் வெளியீடு குறித்து, பெங்களூரில் நிருபர்களைச் சந்தித்த ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் பிரித்வி ரெட்டி, ‘‘முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், ஒருவர் மட்டுமே 46 வயதுடையவர்; 50 சதவிகித வேட்பாளர்கள், 45 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள். விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், சமூகத்துக்காக உழைத்துவருபவர்கள், சூழல் ஆர்வலர்கள் என கர்நாடகா மக்களுக்காக உழைப்பவர்களை வேட்பாளர்களாக தேர்வுசெய்திருக்கிறோம்.
இந்தத் தேர்தலுக்கு, நன்கு படித்த ஆளுமைகளைக் களமிறக்குகிறோம். இந்த முதல் லிஸ்டில் மட்டுமே, 13 வழக்கறிஞர்கள், 3 டாக்டர்கள், முன்னோடி விவசாயிகள், ஆக்டிவிஸ்ட்டுகள் இருக்கின்றனர். ஆளுமைகளாக உள்ளவர்கள், அதிக அளவில் விவசாயிகளைத் தேர்வுசெய்து, இன்னும் இரண்டு கட்டங்களாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்’’ என்றார்.
கணிசமான ஓட்டுகள் உடையும்!
ஆம் ஆத்மியின் வியூகம் குறித்து கர்நாடகா அரசியல் நோக்கர்களிடம் பேசினோம். ‘’10 ஆண்டுகளுக்கு முன்பு மாநிலக் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி, டெல்லி, பஞ்சாப்பில் ஆட்சியைக் கைப்பற்றி, சமீபத்திய குஜராத் தேர்தலில், 13 சதவிகிதம் வாக்குகளைப் பெற்று, தேசியக் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. இதனால், ஆம் ஆத்மி தீவிரமாகக் களப்பணி செய்து வருவதுடன், விரைவில் அரவிந்த் கெஜ்ரிவால் கர்நாடகாவில் வாக்குச் சேகரிக்கவிருக்கிறார். கர்நாடகாவில், பா.ஜ.க., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என இதுவரை மும்முனைப் போட்டிதான் நிலவுகிறது.
தொகுதிக்குள் மட்டுமின்றி மாநில அளவில் பிரபலமான, செல்வாக்கு உள்ள பலரையும், ஆம் ஆத்மியினர் வேட்பாளர்களாக அறிவித்திருக்கின்றனர். மும்முனைப் போட்டியைத் தகர்க்கும் அளவுக்கு ஆம் ஆத்மி பலமாக இல்லாவிட்டாலும், வித்தியாசமான வியூகங்கள் வாயிலாக ஓட்டுகளை உடைப்பார்கள்.
‘பா.ஜ.க 40% ஊழல், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஊழல்,’ என, இதுவரை நடந்த ஆட்சிகளின் ஊழல், குறைபாடுகளைப் பேசியும், கர்நாடகத்தில் ‘ஊழலற்ற ஆட்சி’ என்ற வாக்குறுதியை முன்வைத்தும், ஆம் ஆத்மியினர் காய் நகர்த்திவருகின்றனர். மொத்த மக்கள்தொகையில், 23% வரையுள்ள SC, ST மக்களைக் கவர, பட்டியலின வேட்பாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
தொகுதிக்குள் செல்வாக்கு, ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு, கவர்ச்சி வாக்குறுதிகள், ‘டெல்லி மாடல்’ ஆட்சி உள்ளிட்டவற்றால், கணிசமான ஓட்டுகளைப் பிரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இவர்கள் ஓட்டைப் பிரிப்பதால், எந்தக் கட்சி பயனடையும் என்பதைத் தேர்தல் முடிவுகள்தான் தெரிவிக்கும்’’ என்றனர் விரிவாக.
ஆம் ஆத்மியின் வியூகங்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்…