மதுரை: “இந்திய ஜனநாயகம் காப்பாற்ற ஐரோப்பிய நாடுகளில் ராகுல் காந்தி குரல் கொடுத்தார்” என, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கேஎஸ்.அழகிரி கூறினார்.
மதுரை திருநகரில் இந்திய ஒற்றுமை யாத்திரை வெற்றியையொட்டி காங்கிரஸ் கொடியேற்ற விழா நடந்தது. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று கொடியேற்றினார். மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். கவுன்சிலர் ஸ்வேதா முன்னிலை வகித்தார். மாநகர மாவட்ட தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “கேரளா, தமிழக காங்கிரஸ் கட்சி இணைந்து வைக்கம் நூற்றாண்டுவிழாவை வரும் 28-ம் தேதி ஈரோட்டில் நடத்துகிறது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கான திட்டத்தின் முன் மாதிரி. நிதி அறிக்கையின்போது, அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு முறை. எதிர்க்கட்சி பேரவையில் பேச வேண்டுமே தவிர, அவர்கள் விளம்பரம் கருதி வெளிநடப்பு செய்கின்றனர். ராகுல் காந்தி ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் இந்தியாவை விமர்சனம் செய்ததாக பாஜக குற்றம் சாட்டுவது கண்டனத்திற்குரியது. இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க, காப்பாற்றவே ஐரோப்பிய நாடுகளில் அவர் குரல் கொடுத்தார். ஜனநாயகத்தை பாதுகாக்க உலக நாடுகள் முன்வர வேண்டும்” என்று தெரிவித்தார்.